விபத்தில் மார்புக்குக் கீழ் உடல் செயலிழந்தாலும் வாழ்வில் தளராது செயல்படும் மாற்றுத்திறனாளி..!

1
114

விபத்தால் செயலிழந்து படுத்து படுக்கையாக இருந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாகரன், இன்று வாழ்வை சவாலாக எடுத்துக்கொண்டு 13 லட்சம் கிமி காரிலே பயணித்துள்ளார். முதுகு தண்டுவட பாதிப்பிலும் வாழ்க்கையை துணிந்து வாழும் கருணாகரன். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன். பி.ஏ பட்டதாரி இளைஞரான இவர், கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் அந்த பேரதிர்ச்சி அவர்களின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்கப்பட்டது. மார்புக்குக் கீழே இனி இவரது எந்த உறுப்புகளும் செயல்படாது. முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், சிகிச்சை அளிக்க முடியாது என்று கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள். சிறுநீரகம் கூட இப்போது வரை டியூப் வழியாகத்தான் வெளியேற்றி வருகிறார் கருணாகரன். பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே வாழ்நாளைக் கடந்துள்ளார். இருந்தாலும் தன் நம்பிக்கையால் எப்படியாவது இந்த உலகத்தில் தன்னால் பயணிக்க முடியும் என்கிற முடிவோடு முயற்சி செய்து வந்த நிலையில், அவரது குடும்பத்தார் அவர் வெளியே சென்று வர ஒரு வாகனம் ஏற்பாடு செய்திருந்தனர்.

கருணாகரனை யாராவது தூக்கித் தான் வாகனத்தில் உட்கார வைக்க வேண்டும். அது என்னவோ தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதை உணர்ந்த அவர், ஒவ்வொரு முறையும் வாகனத்தில் செல்லுகிற பொழுது நம்மால் இந்த வாகனத்தை தனியாக இயக்க முடியாதா? என்கிற அந்த ஆவல் அவரிடம் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் சென்னையில் சங்கர் என்கிற நண்பரின் அறிமுகம் கிடைத்தது. கருணாகரனுக்கு சங்கர் ஒரு ரயில்வே தொழிலாளி. சங்கர் இது போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என பல்வேறு உபகரணங்களைத் தயாரித்து கொடுக்கிறவர். இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், வீட்டிற்குள்ளே பயணிக்கும் வீல் சேர், நகர்ந்து வரும் படுக்கை, ரிமோட் கண்ட்ரோலுடன் இயங்கும் மின்சாதன வசதிகள் என பல உபகரணங்களை தயாரிக்கும் வல்லமை கொண்டவர் சங்கர். அவர் வடிவமைத்துக் கொடுக்கின்ற வாகனத்திற்கு தான் அரசு அங்கீகாரம் அளிக்கும். பத்தாண்டுகளுக்கு முன்னதாக ஒரு கார் வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தோடு கார் ஒன்றை வாங்கினார் கருணாகரன்.

மாற்றுத்திறனாளி கருணாகரன்

அதை பலரிடம் தனக்கு சாதகமாக மாற்ற சங்கர் உதவினார். அதன் பின்னர், கருணாகரன் சுயமாக கார் ஓட்டத் தொடங்கினார். மற்றவர்களைப் போல அவர் கார் ஓட்டுவதில்லை. கார் ஓட்டுவதற்குத் தேவையான கியர் வசதி கிளட்ச், பிரேக் என அனைத்து சாதனங்களும் அவரது இடது கைக்குள்ளாகவே அமைந்து விடுவது போல அந்த வடிவமைப்பு இருக்கும். அப்போது இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு அரசாணையை வெளியிட்டார். அதில், மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு தகுந்தார் போல தாங்கள் ஓட்டுகிற வாகனத்தை வடிவமைத்துக் கொள்ளலாம் அதற்கு தமிழக அரசு ஓட்டுநர் உரிமம் வழங்கும் என்று அறிவிப்பு. அந்த அறிவிப்பின் அடிப்படையில் சரணாகரன் ஓட்டுநர் உரிமம் பெற்றார். கருணாகரன் பின்புலம் அப்பா ஐயம்பெருமாள் அம்மா ஜானகி கருணாகரனுக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி மூன்று அக்காக்கள் அப்பாவிற்கு தியாகதுருகம் பகுதியில் நவீன அரிசி ஆலை தான் தொழில். கருணாகரன் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் படித்துள்ளார்.

இந்த நிலையில் தான் அவருக்கு அந்த விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டு ஒரு ஆண்டு படுக்கை புண் நோயால் பெரும் அவதிக்கு உள்ளானார் கருணாகரன். அப்போதெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி என்கிற ஒரு மருத்துவ முறையை பலர் அறியாத காலம். கருணாகரனுக்கு அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வீல்சேரில் தான் பயணம் கருணாகரனுக்கு அந்த வீல் சேர் பயணத்தோடு தன்னுடைய குடும்பத் தொழிலான நவீன அரிசி ஆலையை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றார் கருணாகரன். இருந்தாலும் கருணாகரனுக்கு சுயமாக ஒரு தொழில் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் அவர் வாங்கிய அந்த கார் தான். நண்பன் ஜெயராமனுடன் இணைந்து பல ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டார் கருணாகரன். ஊர்கள் பெரும்பாலும் மலைப்பகுதியாகவே இருந்தது. கொல்லிமலை, சிறுமலை, கொடைக்கானல் என தன்னுடைய காரை தானே ஓட்டிக்கொண்டு சென்றார் கருணாகரன். அப்போது கொல்லிமலை பகுதியில் ஒரு இடம் வாங்கலாம் என்று முடிவு செய்து நண்பர் ஜெயராமருடன் இணைந்து நிலம் வாங்கினார்.

அங்கே பல்வேறு வகையான மரங்கள், மிளகு என பயிரிடத் தொடங்கினார். இதுதான் கருணாகரன் சுயமாக தொடங்கிய முதல் தொழில் அதன் பின்னர், தமிழகத்தின் பல பகுதிகளில் நிலம் வாங்கி விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் ஒன்றை நடத்தினார். தற்போது வரை அதை நடத்தி வருகிறார். தன்னம்பிக்கையுடன் வலம்வரும் கருணாகரன் படுக்கையில் இருந்து யாராவது வீல்சேரில் தூக்கி அமர வைக்க வேண்டும். அதன் பிறகு, அவரை காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர வைக்க வேண்டும். அதற்கு எப்போதும் தமக்கு ஒரு உதவியாளர் தேவை இப்படியாகவே இன்று வரை தொடர்ந்து பயணித்து வருகிறார் கருணாகரன். இதுவரை 13 லட்சம் கிலோமீட்டர் கார் ஓட்டி இருக்கிறார், இன்னமும் ஓட்டுவார். இந்தியாவின் பல மாநிலங்களுக்கு தானே காரை ஓட்டிக்கொண்டு சென்று வந்திருக்கிறார் கருணாகரன். உடலில் சிறிய காயம் ஏற்பட்டு விட்டால் கூட அதை ஊனமாகக் கருதி பலர் தங்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்க பட்டதாகவே நினைத்து வாழ்கிற இந்த காலத்தில் பெரும்பாலான உடல் உறுப்புகள் செயல்படாத நிலையிலும் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார் கருணாகரன்.

மாற்றுத்திறனாளி கருணாகரன் நண்பர்கள்

ஒருமுறை குற்றாலம் அருகே உள்ள ஆயக்குடி அமர் சேவா சங்கத்திற்கு சென்றுள்ளார் கருணாகரன். அப்போது இவரைப் போலவே முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட சிலர் இவரை பார்த்துள்ளனர். அவர்களும் வீல்சேரில் பயணிக்கும் நபர்களாகவே இருந்த நிலையில், அவர்களுக்கு பெரிய நம்பிக்கையூட்டி உள்ளார் கருணாகரன். அப்படி நம்பிக்கை பெற்ற கோவை ஞானசேகரன், சரவணன், சேலம் சக்திவேல், போன்றோர் கருணாகரனை போலவே கார் ஓட்ட பழகி உள்ளனர். தற்போது அவர்களும் கூட சொந்தமாக இது போன்ற வடிவமைக்கப்பட்ட கார்களை ஓட்டி வருகின்றனர். இப்படி பலரது தன்னம்பிக்கைக்கு உதாரணமாக இருந்து வருகிறார் கருணாகரன். மேலும், கருணாகரனின் மற்றொரு நண்பர் ஞானபாரதி, இவர் ஒரு நீச்சல் வீரர். இவருக்கும் கூட ஒரு விபத்திலே முதுகு தண்டுவடம் காயம் அடைந்தது அவரும் வீல்சேரில் பயணித்து பணியாற்றி வருகிறார்.

அவர் மத்திய அரசின் தோல் ஆராய்ச்சி நிலையத்தில் இப்போது சென்னையில் பணியாற்றி வருகிறார். என்னால் எதுவும் முடியாது என்று இயலாமையை வெளிப்படுத்திக் கொண்டு வரும் சாதாரண மனிதர்களுக்கு நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்து வருபவர் கருணாகரன். கருணாகரன் மாற்றுத்திறனாளிகளுக்கான துப்பாக்கிச்சூடும் போட்டியில் பலமுறை பங்கு கொண்டுள்ளார். துப்பாக்கி சுடுவதில் வல்லவர் தொடர்ந்து பயிற்சி பெரு, அப்பயிற்சியில் வெற்றி பெற்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து பாராட்டு பெற்றார். கருணாகரன் தற்போது முதுகு தண்டுவடம் காயம் அடைந்தோர் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். பலருக்கு முன்மாதிரியாகவும் உதவியாகவும் இருந்து வருகிறார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here