கிருஷ்ணகிரி மாவட்டம், அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள தேவன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ருத்திரன் (34). கடந்த மாதம் 8 ஆம் தேதி ருத்திரனும் அவரது நண்பர்களும் கிராமத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடி உள்ளனர்.

அப்போது ரோந்து பணியில் சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் போலீசார் அனைவரையும் ஜாமினில் விடுவித்தனர். இந்த சம்பவத்தின் போது போலீசார் ருத்திரனின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த மாதம் 10 ஆம் தேதி ருத்திரன் அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு சென்று இருசக்கர வாகனத்தை கொடுக்கும்படி கேட்டுள்ளார். அப்போது போலீசார் இந்த வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் நீதிமன்றம் மூலம் இருசக்கர வாகனத்தை பெற்று கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

அதில் விரக்தியடைந்த ருத்திரன் உடலில் பெட்ரோல் ஊற்றி காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து அங்கிருந்த போலீசார் அவரை மீட்டனர். படுகாயமடைந்த ருத்திரன் ஓசூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல : சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்ணுக்கு அழையுங்கள்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் – 044-24640050
மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் – 104