விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படுவது தென்பெண்ணை ஆறு. கர்நாடகாவில் ஆறு உற்பத்தியாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து ஓடி வருகிறது தென்பெண்ணை ஆறு. பல கிளை ஆறுகளை கொண்டது தென்பெண்ணை ஆறு. விழுப்புரம் தளவானூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரிந்து புதுச்சேரி வரை பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு கிளை நதி தான் மலட்டாறு. இந்தக் கிளை நதியில் இருந்து பிரிவது நரியாறு. பில்லூர், ஆனாங்கூர், பனாம்பட்டு, சிறுவந்தாடு வரை 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த நரியாறு மூலமாக விவசாயம் பாசன வசதியும் செய்து கிராம மக்கள் பயனடைகின்றனர்.
மழைக்காலங்களில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர், கிளை நதியான நரியாற்றில் பிரிந்து பல கிராமங்களில் உள்ள ஏரிகளை நிரப்பி வந்திருக்கிறது. ஆனால் தற்போது இந்த கிளை நதியை காணோம் என்கிறார்கள் கிராம மக்கள். தற்போது திருப்பாச்சனூரில் ஒரு பகுதியில் மலட்டாற்றின் குறுக்கே ஒரு மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த திருப்பாச்சனூர் பகுதியில் இருந்து பில்லூர், ஆனாங்கூர் பனாம்பட்டு, சிறுவந்தாடு ஆகிய பகுதிகளுக்கு செல்லுகிற பாதை ஒன்று நரி ஆற்றை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளது.

அதனால் நரி ஆற்றில் தண்ணீர் செல்லுவது தடைபட்டு உள்ளது. அது மட்டும் அல்லாமல் பில்லூர், ஆனாங்கூர் பனாம்பட்டு, சிறுவந்தாடு ஆகிய பகுதிகளில் நரி ஆற்றை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டி இருப்பதாலும் விளைநிலங்களாக பயன்படுத்துவதாலும் ஆற்றிற்கு தண்ணீர் செல்லுவது தடைபட்டுள்ளது. பல கிராமங்களில் விவசாய தேவைகளை பூர்த்தி செய்யும் நீர் ஆதாரமாக கருதப்படும் நரியாறு தற்போது பலரின் ஆக்கிரமிப்பால் காணாமல் போய் உள்ளது என்கிறார்கள் கிராம மக்கள்.

இத்தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்கிறார்கள் விவசாயிகள். தற்போது பெய்து வரும் மழையில் நரி ஆற்றின் மூலமாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது இந்த விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் செய்யுமா என காத்துக் கிடக்கிறார்கள் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள். காணாமல் போன ஆற்றை கண்டுபிடித்து தருவாரா மாவட்ட ஆட்சியர்.
அதிர்ச்சி