கோவையைச் சேர்ந்த ”சிந்துமோனிகா” – ’தி ரியல் சிங்கப்பெண்’.!

0
126
சிந்து மோனிகா

குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே உகந்த உணவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், தாய்ப்பால் சுரக்காத பல தாய்மார்கள் என்ன செய்கிறார்கள்?
ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்ததும் அவர் உடலில் தாய்ப்பால் சுரக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தாயான பிறகு உடல் மற்றும் மனரீதியான அழுத்தங்களால் பால் சுரக்காமல்
போகும் நிகழ்வுகளும் நடக்கின்றன. அப்படி தாய்ப்பால் சுரக்காத தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் பால் தேவையைப் பூர்த்தி செய்யத் தாய்ப்பால் வங்கியை நாடுகிறார்கள். ஆனால், அதனாலேயே அவர்கள் பல சமூக அழுத்தங்களையும் விமர்சனங்களையும் கூட எதிர்கொள்கின்றனர்.

தாய்ப்பால் வங்கியைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளின் தேவையைப் பூர்த்தி செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். இந்த அணுகுமுறை அவர்களது குழந்தைகளின் பசியைப் போக்க, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவினாலும், தாய்ப்பாலை தானமாகப் பெறுவதால் அவர்கள் சமூக புறக்கணிப்புக்கு ஆளாவதாகவும் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் 2014இல் தொடங்கப்பட்ட முதல் தாய்ப்பால் வங்கி சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் செயல்பட்டு வருகின்றது.

அந்த வங்கியில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 700க்கும் மேற்பட்ட தாய்மார்கள் தானமாக வழங்கும் தாய்ப்பால் சேகரிக்கப்பட்டு, சுமார் 400 முதல் 500 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. ஆக, அறிவியலாலும் விஞ்ஞானத்தாலும் எட்ட முடியாத கலப்படமற்ற பொருள் தாய்ப்பால். தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால் தான். தாய்ப்பாலால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். பச்சிளம் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும், வளர்ச்சிக்கும் தாய்ப்பால் இன்றியமையாததாக இருக்கிறது.

அப்படி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் கல்லூரி பேராசிரியர் மகேஸ்வரன். இவரது மனைவி சிந்து மோனிகா. திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் இரண்டு வயதில் வெண்பா என்ற பெண் குழந்தை உள்ளது. தாய்ப்பால் தானம் குறித்து சிந்து மோனிகா சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்து தானும் அதே போல தாய்ப்பால் தானம் செய்ய வேண்டும் என முடிவு செய்து திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தாய்ப்பால் சேமிப்புக்காக செயல்பட்டு வரும் அமிர்தம் தாய்ப்பால் தானம் என்ற அமைப்பு மூலம், சிந்து மோனிகா கடந்த ஆண்டு பத்து மாதங்களாக 55 லிட்டர் தாய்ப்பாலை சேகரித்து கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கியுள்ளார்.

இவரின் முயற்சி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டதின் பேரில்  ஆசியா மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் மெடல்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து இவர் தாய்ப்பால் தானம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பொது பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள், குழந்தைகளின் நிலையை அறிந்து தனியார் அமைப்பு மூலம் தனது தலை முடியை முழுவதுமாக தானமாக வழங்கி உள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், புற்றுநோயால் குழந்தைகள், இளம்பெண்கள், பாதிக்கப்படுவதால் அவர்களின் தலைமுடி உதிர்ந்து காணப்படும் அவர்களின் மன வலியை போக்கும்
வகையில் தனியார் அமைப்பு அவர்களுக்கு விக் செய்து கொடுத்து வருகிறது.

இது குறித்து நண்பர்கள் மூலமாக தான் அறிந்த நிலையில் உடனடியாக புற்று நோய்யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என முடிவு செய்து நேற்று தனது தலைமுடி முழுமையாக
தானமாக வழங்கி உள்ளதாகவும் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தன்னுடைய இந்த முயற்சிக்கு கணவர் முழு ஆதரவு அளிப்பதாகவும் பெற்றோர் உறவினர்கள்  தொடர்ந்து ஆதரவாக இருப்பதால் பல்வேறு சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here