இரு கைகள் இன்றி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன்

0
51
க்ரித்தி வர்மா

இரு கைகள் இன்றி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவனை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று இனிப்பு வழங்கி பாராட்டியதுடன்

5 லட்சம் ரூபாய்க்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூர் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவரின் மகன் க்ரித்தி வர்மா. நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் க்ரித்தி வர்மா பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.

மாணவன் க்ரித்தி வர்மாவிற்கு நான்கு வயது இருக்கும் பொழுது மின்சாரம் தாக்கியதில் அவர் தனது இரண்டு கைகளையும் இழந்துள்ளார். இந்த நிலையில் தன்னம்பிக்கையுடன் படித்த க்ரித்தி வர்மா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

இரு கைகளின்றி தன்னம்பிக்கையுடன் படித்து முதலிடம் பிடித்த மாணவரை முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்ததுடன் மாவட்ட ஆட்சியரை அனுப்பி வைத்து தேவையான உதவிகள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் தீபஜ் ஜேக்கப் ஜீனூர் கிராமத்தில் உள்ள மாணவனின் இல்லத்திற்கே சென்று மாணவன் க்ரித்தி வர்மாவிற்கு புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து மாணவனின் உடல்நிலை குறித்து விசாரித்த ஆட்சியர் மாணவனுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை வழங்கினார்.

இரு கைகள் இல்லாமல் மாணவன் தனது பணிகளை தானே செய்துகொள்வதுடன், ஓவியம் வரையும் திறமையையும் கண்டு ஆச்சரியமடைந்த ஆட்சியர் மாணவனின் ஓவியத்தை தனது செல்போனில் படம் பிடித்துக்கொண்டார்.

இந்த நிகழ்வின் போது மாவட்ட மருத்துவ காப்பீடு திட்ட அலுவலர் சையத் அலி, மாவட்ட மாற்று திறனாளி அலுவலர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் மாணவன் வீட்டிற்கு சென்று கல்வி ஊக்கத் தொகையாக ரூ. 50,000 வழங்கி மாணவனை பாராட்டினார்.

மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவியும் கல்வி உதவியும் திமுக அரசு செய்து தரும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அதிமுக துணை பொது செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் இருவரும் மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று மாணவன் க்ரித்தி வர்மாவை வாழ்த்தினர்.

தொடர்ந்து மாணவனுக்கு கல்வி ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கினார்கள்.

இதை தொடர்ந்து மாணவனின் தாயாரிடம் பேசிய கே.பி. முனுசாமி தாங்கள் விரும்பும் எந்த பள்ளியில் வேண்டுமானாலும் மாணவனை சேர்த்துக் கொள்ளுமாறும் அதற்கு உண்டான கல்வி செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here