கல்பாக்கம் அருகே மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது. விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது நண்பர்களான சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் (20) உள்ளிட்ட 5 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்று விட்டு நேற்று காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது செங்கல்பட்டு மாவட்டம், அடுத்த கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கார் அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த நேரத்தில் திடீரென பசுமாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது.
பின்பு மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது. அதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர்.

இந்த விபத்தைக் கண்ட வாயலூர் பகுதி மக்கள் அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்க, இரும்பை அறுக்கும் எந்திரம் மூலம் காரை அறுத்து படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு
அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே யுவராஜ் (20) மற்றும் மற்றொரு வாலிபர் என 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.