மேற்கு வங்கத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிற்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோடை வாசஸ்தலமாக உள்ள டார்ஜிலிங் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த ரயிலில் தான் அதிக அளவில் பயணம் செய்வார்கள்.

இந்த நிலையில், ரயில் வழக்கம் போல புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்தது.
நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் அதிவேகத்தில் மோதியது. அதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன.

இந்த விபத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து தொடர்பாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 033-2350-8794, 033-238-33326 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரயில் விபத்திற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நின்று கொண்டிருந்த கஞ்சன் ஜங்கா ரயில் மீது மோதிய சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததே விபத்துக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

மனித தவறு காரணமா? அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ரயில்கள் மோதிக்கொண்டதில் சரக்கு ரயிலின் லோகோ பைலைட் மற்றும் அவரது உதவியாளரும் உயிரிழந்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரயிலின் கார்டும் பலியாகியுள்ளார்.