விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் ஐந்தால் ஆன சிறப்பம்சத்தை கொண்ட கோவிலாக அமைந்துள்ளது.
பல கோவில்களில் கிடைக்கும் வரங்களை இந்த ஒரே கோவிலில் பெறலாம் என்பது ஐதீகம். இந்த ஆண்டு 12 நாட்கள் நடைபெறும் மாசி மகத்திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 20 ஆம் தேதி கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சியளித்தல் என்ற ஐதீக திருவிழா நடந்தது. சிகர நிகழ்ச்சியான 9 ஆம் நாள் திருவிழாவாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது.
முன்னதாக விநாயகர், சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

அப்போது சிவாச்சாரியார்கள் மகா தீபாராதனைகள் காண்பிக்க, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் மற்றும் பஞ்சமூர்த்திகளும் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களிலும் எழுந்தருளினர். தொடர்ந்து விநாயகர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இதை தொடர்ந்து வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

இந்த தேரானது 4 கோட்டை வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்ததும், விருத்தகிரீஸ்வரர் எழுந்தருளிய தேரும், விருத்தாம்பிகை அம்மன் எழுந்தருளிய தேரும் சண்டிகேஸ்வரர் எழுந்தருளிய தேரும் ஒன்றன் பின் ஒன்றாக சென்று 4 கோட்டை வீதிகளையும் வலம் வந்து நிலையை வந்தடைந்தது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். விருத்தாசலம் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ், திமுக நகர செயலாளர் தண்டபாணி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதல் முதலில் விநாயகர் தேர், நிலையிலிருந்து சிறிது தூரம் நகர்ந்தவுடன் சக்கரம் பழுதடைந்தது. இதனால் தேரை மேற்கொண்டு நகர்த்த முடியாமல் அந்த விடத்திலேயே நின்றது.
அப்போது சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி கிரேன் இயந்திரம் கொண்டு தேரை நகர்த்தினர். இதனால் சுமார் ஒரு மணி தேரை இழுப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டது.