விழுப்புரத்தில் பொங்கல் பண்டிகையின் ஐந்தாம் நாளான இன்று ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்று திருவிழா களைகட்டியது. ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். உற்சவமூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழா கடந்த 14 ஆம் தேதி போகிபண்டிகையுடன் தொடங்கியது. பெரும் பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கலை தொடர்ந்து 5-வது நாளான நேற்று ஆற்றுத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டுமே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் இந்த ஆற்று திருவிழாவானது விவசாயத்திற்கும், குடிநீருக்கும் ஜீவாதாரமாக விளங்கி வரும் ஆறுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி தை மாதத்தின் 5 ஆம் நாளான நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மலட்டாறு, பம்பை ஆறு, வராக நதி ஆறு உள்ளிட்ட ஆறுகள் செல்லும் இடங்களில் சின்னக் கள்ளிப்பட்டு, பிடாகம், பில்லூர், அகரம் சித்தாமூர், ஆய்யூர் அகரம், அரகண்டநல்லூர், வீடூர், விக்கிரவாண்டி, குயிலாப்பாளையம் உள்ளிட்ட 23 இடங்களில் இந்த ஆற்றுத்திருவிழா நடைபெற்றது.
அப்போது அந்த ஆற்றுத்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, ஆற்றுத்திருவிழாவை கொண்டாடினார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பிடாகம், கண்டரக்கோட்டை, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பாக நடந்த ஆற்றுதிருவிழாவில் காலை முதலே மக்கள் குவிந்ததால் ஆற்றுத்திருவிழா களைகட்டியது. ஆற்றுத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் அந்தந்த பகுதியில் இருந்து பக்கத்திலுள்ள ஆறுகளுக்கு உற்சவமூர்த்திகள் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்டரக்கோட்டையில் நடந்த ஆற்றுத்திருவிழாவில் பூவரசன்குப்பம், கோலியனூர், மேல்பாதி உள்ளிட்ட கிராமங்களிலில் இருந்து சாமிகள் தீர்த்தவாரிக்கு சென்றன. எஸ்.பி தீபக்சிவாச் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆற்று திருவிழாவுக்கு வந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.