திருவாரூர் அருகே அரசு பள்ளி மாணவி வீட்டில் மின்சாரம் இன்றி படித்து பத்தாம் வகுப்பில் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்த மாணவி வீட்டிற்கு தமிழக அரசு மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது.
உடனடியாக மின்சாரம் வழங்கிய தமிழக முதல்வருக்கு மாணவி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

திருவாரூர் மாவட்டம், அடுத்த கொரடாச்சேரி அருகே பத்தூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பாலா – சுதா தம்பதியரின் மகள் துர்கா தேவி. இவர் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
அதை தொடர்ந்து பள்ளிக்கு திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் நேரில் சென்று மாணவியை வாழ்த்தினார். அப்போது மாணவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கூறியதாவது;-

தனது வீட்டில் மின்சாரம் இன்றி ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பக்கத்து வீட்டில் சார்ஜ் செய்து செல்போன் வெளிச்சத்திலும், மெழுகுவத்தி வெளிச்சத்திலும் படித்து வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் வீட்டிற்கு மின்இனைப்பு வழங்க மூன்று கம்பம் நடுவதற்கு செலவு செய்ய முடியாத நிலையில் தமிழக அரசு சார்பில் உதவி செய்து விரைவில் தனது வீட்டிற்கு மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சார்பில் உடனடியாக மாணவியின் இல்லத்திற்கு அரசு சார்பில் முன்பணம் செலுத்தப்பட்டு, உடனடியாக புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.
இதற்கு மாணவி துர்கா தேவி தனது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இதற்காக உதவி செய்த திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மற்றும் மின்சார வாரியத்திற்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் 12 ஆம் வகுப்பு மாநிலத்திலேயே முதலிடம் பெற்று மருத்துவர் ஆக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.