கடலூர் மாவட்டம், திட்டக்குடி, தொழுதூர் பகுதி இளைஞர்கள் ஆந்திராவிலிருந்து கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வருவதாக பேருந்து அடையாளத்துடன் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில், திட்டக்குடி, வேப்பூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னை – திருச்சி சாலையில் வேப்பூர் காவல் நிலையம் அருகே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 4 பேர் கொண்ட கும்பல் 13 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், கடலூர் மாவட்டம் தொழுதூர் மேற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (25), ராமநத்தம் வ.உ.சி. நகர் தெற்கு தெருவை சேர்ந்த கார்த்திக் (24), திட்டக்குடி புளியகாரம்பலூர் மாரியம்மன் கோவில் தெரு மணி வண்ணன் (23), தொழுதூர் பழையரோடு லோகநாதன் (22) என்பது தெரியவந்தது.
இவர்களில் கைதான சக்திவேல் வெங்கனூர் தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக பணியாற்றி வந்ததும், கடந்த 8 மாதங்களாக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் இது தொடர்பாக வேறு யாருக்கும் சம்பந்தம் உள்ளதா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி, சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம், தனிப்படை போலீஸ்காரர்கள் சுரேஷ், எஸ்.பி தனிப்பிரிவு போலீசார் சதன், அருண், சுதாகர், சைபர் கிரைம் போலீஸ் பாலமுருகன் ஆகியோரை எஸ்.பி ராஜாராம் பாராட்டினார்.