ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு – மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்

அமலாக்கத்துறை தரப்பில் நேற்றிரவு தான் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை குறிப்பிட்டு பேசிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “அமலாக்கத்துறை இந்த வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்த முயற்சிக்கிறது. நாங்கள் வாதங்களை முன் வைக்க தயாராக இருக்கிறோம்.” என்று வாதிட்டார்.

செந்தில் பாலாஜி

பின்னர் கால தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மன்னிப்பு கேட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவை படிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.” என்று உத்தரவிட்டனர்.

அமலாக்கத்துறை

அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “கொடுக்கல், வாங்கல் விஷயத்தை பண மோசடி என்று கட்டமைக்கிறது அமலாக்கத்துறை. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார்.

எனவே வழக்கை உடனே விசாரித்து செந்தில் பாலாஜிக்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

உச்சநீதிமன்றம்

ஆனாலும், “வழக்கின் விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 10 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here