எட்டயபுரம் அருகே பட்டியலின பெண் சமைத்த முதலமைச்சர் காலை உணவு திட்ட உணவை சாதி பாகுபாடு காரணமாக உணவை சாப்பிடாமல் புறக்கணித்த பள்ளி குழந்தைகள் பள்ளியில் கோட்டாட்சியர்,வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு கடந்த மாதம் ஆகஸ்ட் 25 ம் தேதி முதல் காலை – மதியம் என இரண்டு வேலையும் அப்பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கபட்டு வருகிறது. இப்பள்ளியில் சமையலறாக அதே பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரி என்பவர் மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு இப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் நாவழக்கம் பட்டி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கும் சமையலாறாக இருந்து வருகிறார்.
இவர் அரசு விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டு பணி செய்து வருகிறார்.இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி காரணமாக பெற்றோர்களின் தூண்டுதலின் பேரில் ஒரு சில மாணவர்கள் காலை உணவை சாப்பிடாமல் மறுத்து வந்துள்ளனர் .
இந்த பிரச்சனை கடந்த ஒரு வார காலமாக அரங்கேறிய வண்ணம் உள்ளது மேலும் அவர்களுக்கு சமைத்த உணவை சாப்பிடாமல் பள்ளி மாணவ மாணவிகள் புறக்கணித்து வருவதால் கடந்த ஒரு வார காலமாக காலை உணவு தொடர்ந்து வீண் அடிக்கப்பட்டு வருகிறது .
இவ்விவகாரம் தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜோன் கிருஷ்டிபாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ் குமார், எட்டையபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது உள்ளிட்டோர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர் . விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் பெ.கீதாஜீவன் , சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அமைச்சர் கூறும்போது, “பள்ளியில் நேரில் ஆய்வு செய்தோம். மாணவர்களுடன் பேசுகையில் அவர்கள் தானாக எந்த முடிவும் எடுக்க வில்லை என்பதும் அவர்களது பெற்றோர்கள் தூண்டுதல் காரணமாக காலை உணவை புறக்கணித்ததும் தெரியவந்துள்ளது . மேலும் கிராம மக்கள் விசாரணை மேற்கொண்டதில் தனிப்பட்ட பிரச்சினையில் சமையலர் பெண்ணுடன் சண்டை போட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் .
சாதி பாகுபாடு காரணமாக கோவில்பட்டி அருகே முதலமைச்சரின் காலை உணவு திட்ட உணவை பள்ளி மாணவ மாணவிகள் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார் .
கடந்த மாதம் இதே போன்றே சம்பவம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஏற்பட்டிருந்ததும் , இதற்கு அம்மாவட்ட ஆட்சியரின் தலையிட்டால் உடனடியாக தீர்வு காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .