கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியை உலகங்காத்தான் கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு…

0
72
விவசாயிகள்

கள்ளக்குறிச்சி அருகே உலகங்காத்தான் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது.சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியில் கடந்த ஒரு மாத காலமாக, அரசு அனுமதி பெறாமல் 20 அடி ஆழத்துக்கும் மேல் பல்வேறு இடங்களில் ஏரியில் கிணறுகள் போல வெட்டி, மண் அதிக ஆழத்துக்கு எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தடுக்கக்கோரி, அக்கிராம மக்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயனில்லை. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அஞ்சல் அலுவலகத்தின் மூலம் தமிழக முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.


இதனால், உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.இதனால், ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் பகுதியை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பும் நிலவியது.


இதனைத் தொடர்ந்து, உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் 5 பேரை மட்டும் மனு அளிக்க போலீசார் உள்ளே அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து, அவர்கள் மனு அளித்தனர்.
மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன்குமார், ஏரியில் மண் எடுக்க உடனடியாக தடை விதிப்பதாகவும், ஏரியில் சட்டவிரோதமாக மண் எடுத்திருந்தாலோ அல்லது கருவேல மரங்களை வெட்டி இருந்தாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததாக, விவசாயிகள் சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here