கள்ளழகர்

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் நடைபெற்றது. உலக புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும்.

பக்தர்கள்

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்:

பக்தர்கள் வைகை ஆற்றில் எங்கே இறங்கலாம்? திருவிழா தொடங்கிய நாள் முதல் தினமும் காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் கற்பக விருட்சம், சிம்மம், பூத, அன்ன, கைலாச பர்வதம், காமதேனு, தங்கப்பல்லக்கு, தங்கக் குதிரை, ரிஷப, நந்திகேஸ்வரர், யாளி, வெள்ளி சிம்மாசனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதன் தொடர்ச்சியாக பட்டத்து அரசியாக மீனாட்சி சென்று போரில் தேவர்களை வென்று இறுதியில் சுந்தரேஸ்வரரிடம் போர்புரியும் திக்குவிஜயம் கடந்த 20ஆம் தேதி இரவு விமரிசையாக நடந்தது.

வைகை ஆற்றில்

சித்திரை திருவிழா;

சித்திரை திருவிழான் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த 21 ஆம் தேதி நடந்தது. இதையொட்டி அன்றைய தினம் காலை 4 மணி அளவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி 4 சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். கோயிலுக்குள் உள்ள மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மேடை ரூ 30 லட்சம் செலவில் 10 டன் நறுமண மலர்கள், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருக்கல்யாணம் வேத மந்திர முழக்கங்களுடன் நடந்தது. மணப்பெண்ணான மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி, முத்துக் கொண்டை, தங்க கிரீடம், மாணிக்க மூக்குத்தி, தங்க காசு மாலை, பச்சை கல் பதக்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்திருந்தார்.

மதுரை மீனாட்சி திருத்தேரோட்டம்

சுவாமி சுந்தரேஸ்வரர் பட்டு வஸ்திரம், பவளங்கள் பதித்த கிரீடம், வைரம் பதித்த மாலைகள் அணிந்திருந்தார். இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மதுரை மீனாட்சி திருத்தேரோட்டம் நடைபெற்றது. மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் தனித்தனி தேரில் ஆடி ஆடி மாட வீதிகளை வலம் வந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி வந்தார். மதுரையில் மூன்று மாவடியில் நேற்று காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு தல்லாங்குளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் அழகர் தங்கியிருந்தார். அங்கு அவர் திருமஞ்சனம் கொண்டார். அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தன.

தங்க குதிரை;

இன்று காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள்பாலித்தார். இதைத் தொடர்ந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருளினார். பின்னர் சித்ரா பவுர்ணமி தினத்தின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் நடைபெற்றது. இந்த கண் கொள்ளா காட்சியை காண வைகை ஆற்றை சுற்றி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மேற்கொண்டது.

கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்;

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது அவர் மீது பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது என்ன நிறத்தில் பட்டாடை உடுத்தி வருகிறார் என்பதை காண மக்கள் ஆர்வமாக கூடியிருந்தனர். அழகர் ஆற்றில் இறங்கியதும் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கம் விண்ணை பிளக்கும் அளவிற்கு ஒளித்தது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here