லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்தனர். மத்திய கிழக்கு பகுதியில் கடந்த சில காலமாகவே பரபர சூழலே நிலவி வருகிறது.
இஸ்ரேல் காசா இடையேயான போர் கடந்த அக். மாதம் முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. பல மாதங்களைக் கடந்தும் இந்தப் போர் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இதற்கிடையே இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும், இரண்டு இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதன்படி அங்கே லெபனானில் இருந்து வந்த ஒரு டேங்க் எதிர்ப்பு ஏவுகணை இஸ்ரேலின் வடக்கு எல்லையான மார்கலியோட் பகுதியை தாக்கியுள்ளது. அங்குள்ள பழத்தோட்டத்தில் நேற்றிரவு இந்த ஏவுகணை தாக்கியதில் இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவர் தென்மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவராம். அதேபோல இந்த தாக்குதலில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்களும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் தெரிகிறது.

இந்த ஏவுகணை திங்கள்கிழமை காலை 11 மணியளவில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு பழத்தோட்டத்தைத் தாக்கியதை அந்நாட்டின் மீட்பு சேவைகள் பிரிவின் செய்தித் தொடர்பாளர் மேகன் டேவிட் அடோம் உறுதி செய்துள்ளார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்த நபர் கேரளாவைச் சேர்ந்த பட்னிபின் மேக்ஸ்வெல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகியோர் அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில்,

“இந்தத் தாக்குதலில் இருவருக்கம் முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் இப்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு லெபனானில் உள்ள ஷியா ஹிஸ்புல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும், ஹிஸ்புல்லா படை தொடர்ச்சியாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்து பீரங்கி மற்றும் ஷெல் தாக்குதல்களையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பக்கம் இருக்க அதேபோல மத்திய தரைக்கடல் பகுதியில் வரும் வணிக கப்பல்களைக் குறி வைத்தும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

என்ன தான் இஸ்ரேல் கொடியுடன் வரும் வணிக கப்பல்களை மட்டுமே தாக்குவதாக ஹிஸ்புல்லா கூறினாலும், கடந்த காலங்களில் அனைத்து நாடுகளின் கப்பல்களையும் ஹிஸ்புல்லா படை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லாவும் அங்கே களமிறங்கியுள்ளது.
இதனால் ஒரு பக்கம் காசா உடன் போரை நடத்தினாலும் மறுபுறம் ஹிஸ்புல்லா அமைப்பையும் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தெற்கு லெபனான் நகரமான சிஹினில் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.