உலக வரலாற்றில் முதன்முறையாக மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்க இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது. UNFPA எனப்படும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு இந்த தகவலை உறுதி செய்து இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கி வரும் UNFPA எனப்படும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் விபரத்தை வெளியிட்டு இருக்கிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்து இருந்த சீனாவை இந்தியா முந்த உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
அதாவது சீனாவை விட 29 லட்சம் பேர் அதிகம் உள்ளதாக அந்த அமைப்பு கூறி உள்ளது. 142.86 கோடி மக்கள் தொகையுடன் இந்தியா முதலிடத்திலும், 142.57 கோடி மக்கள் தொகையுடன் சீனா 2வது இடத்திலும் உள்ளது. UNFPA அமைப்பு வெளியிட்டு 2023 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பல ஆண்டுகளாக இந்த பட்டியலில் முதலிடத்தில் சீனாவும் 2 வது இடத்தில் , இந்தியாவும் இருந்து வரும் நிலையில், சீனாவில் மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கான பல்வேறு சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டன. குறிப்பாக அதிகளவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதே நேரம் இந்தியாவில் இதற்கான கட்டுப்பாடுகள் இல்லை.
எனவே சீனாவை விட இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து ஒருநாள் அந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்று பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து UNFPA தெரிவிக்கையில், எப்போது மக்கள் தொகையில் முந்தியது என்ற நாளை குறிப்பிடுவதற்கு வாய்ப்பு இல்லை.
2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை உலகம் முழுவதும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் ஆனால், கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் காரணமாக இந்த பணிகள் தாமதமானதாகவும் ஐநா அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் உள்ள மக்கள் தொகையை சேர்த்தால் உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகையை விட அதிகம்.
உலக மக்கள் தொகையை பொறுத்தவரை 804 கோடியாக அதிகரித்து உள்ளது. அதே நேரம் இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைந்து இருப்பதாகவும், அதே நேரம் இந்தியாவை விட சீனாவில் தற்போது மக்கள் தொகை பெருக்க விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. 60 ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஆண்டு சீனாவில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்தியாவில் மக்கள் தொகை எண்ணிக்கை 1.2 சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்த விகிதம் 10 சதவீதம் அதிகரித்து உள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.