என்.ஆர் காங்கிரஸ், பாஜக அரசை கண்டித்தும், சிறுமிக்கு விரைவாக நீதி வழங்க கோரியும் புதுவை முழுவதும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடத்தப்பட்டது. அடுத்தடுத்த மறியல் போராட்டங்களால் புதுச்சேரி ஸ்தம்பித்தது.
புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு விரைவாக நீதி வழங்கக்கோரி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் முத்தியால்பேட்டை சின்னமணி குண்டு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில தலைவர் முனியம்மாள் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு மற்றும் புதுச்சேரி காவல் துறையை கண்டித்தும், விரைவாக நீதி வழங்ககோரியும் மறியல் செய்தனர்.
அதைப்போல் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் சட்டக்கல்லூரி மாணவ – மாணவிகள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இசிஆரில் இருந்து பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை அருகே பேரணியாக வந்த போது போலீசார் அவர்களை தடுத்த நிறுத்த முயன்றனர். ஆனால் தடையை மீறி முத்தியால்பேட்டை காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து ஒரே நேரத்தில் காந்தி வீதியில் அடுத்தடுத்து சாலை மறியல் நடந்ததால், சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதேபோல் புதுச்சேரி கடற்கரை சாலையிலும் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பெரியகடை போலீசார் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் அவர்களை கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் காந்தி சிலை அருகே அமர்ந்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றும், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், கவர்னர் தமிழிசை ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட கோரிக்கை விடுத்தனர்.
அதைப்போல் அகில இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் அஜந்தா சிக்னல் அருகே கல்லூரி மாணவ- மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரி மறியல் செய்தனர்.

இதுபோன்று ராஜீவ் காந்தி சதுக்கம் அருகே அந்த பகுதி மக்கள் சிறுமிக்கு நீதி கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து லாஸ்பேட்டை சிவாஜி சிலை அருகே அந்த பகுதி பொதுமக்கள் அந்த வழியாக வந்த தனியார் மற்றும் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வந்த லாஸ்பேட்டை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அப்போது போலீஸ்காரரை ஒருவர் தாக்கியதில் அவர் அணிந்திருந்த தொப்பி கீழே விழுந்தது.
இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முத்தியால்பேட்டையில் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கேட்டும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரியும், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரே நாளில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டத்தால் புதுச்சேரி முழுவதும் பெர்ம் பரபரப்பு நிலவியது.