முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்தத் தகவலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் முன்னிலையில் அவர்கள் தங்களை கட்சியில் இணைத்து கொண்டனர்.

இது குறித்து மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை;- “பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் டெல்லியில், மத்திய இணை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி போன்றவர் ஆவார்கள்.

அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், தமிழகத்தின் மாற்றுக் கட்சிகளிலிருந்து அரசியல் அனுபவமிக்க மக்கள் பிரதிநிதிகள், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். அவர்கள் விவரம்;-

கரூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.வடிவேல்
கோயம்புத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரைசாமி
பொள்ளாச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.வி.ரத்தினம்
சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி
அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.கந்தசாமி
தேனி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர்.ஜெயராமன்,
வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழக அமைச்சர் கோமதி சீனிவாசன், வேடசந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எம்.வாசன், ஆண்டிமடம் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.தங்கராஜ், புவனகிரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.அருள்

பாளையங்கோட்டை தொகுதி முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.குருநாதன்
காங்கேயம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வி முருகேசன்
திட்டக்குடி தொகுதி முன்னாள் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழழகன்
காட்டுமன்னார் கோவில் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன்
கொளத்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ரோகிணி
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த டாக்டர் குழந்தைவேலு இவர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். மக்கள் நலன் சார்ந்த நேர்மையான தேசியக் கண்ணோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட அனைவரையும் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த சமீபத்தில் பாஜகவில் இணைந்த, சேலம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.இ.வெங்கடாசலம், கன்னியாகுமரி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்துகிருஷ்ணன் ஆகியோரும் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில், மக்கள் நலன் சார்ந்த, நேர்மையான அரசியல் மாற்றம் உருவாக்க, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, அனைவரின் மேலான உழைப்பையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன்” என்று அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.