மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றி அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஏபிபி – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணியே முழுமையாக கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் 52 சதவீத வாக்குகளை அளித்து அமோக வெற்றியை தருவார்கள் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த முறை தேனி தொகுதியில் வென்ற அதிமுகவுக்கு, இந்த முறை அந்த ஒரு தொகுதியும் கிடைக்காது எனவும், அந்த கட்சி 23 சதவீத வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் பூஜ்ய இடங்களே கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதோடு, இக்கூட்டணிக்கு 19 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்தை பிடித்து விடலாம் என்கிற பாஜகவின் கனவு பலிக்காது என்பது இந்த கருத்துக்கணிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை போலவே தென் இந்தியாவில் பாஜகவுக்கு பலத்த சரிவு ஏற்படும் என இந்த கருத்துக்கணிப்பிலும் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் 20 தொகுதிகளில் காங்கிரசின் யுடிஎப் கூட்டணியே அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. பாஜக மற்றும் இடதுசாரிகள் கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது.
தெலங்கானாவில் 17 தொகுதிகளில் காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புண்டு. பாஜக 3 இடங்களிலும், பிஆர்எஸ், ஏஐஎம்ஐஎம் தலா 1 இடங்களில் வெற்றி பெறலாம்.

பஞ்சாப்பில் 13 இடங்களில் காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 இடங்களிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. இங்கு பாஜகவுக்கு 2 இடம் கிடைக்க வாய்ப்புண்டு.
மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 20 தொகுதிகளை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் 2 இடத்தில் வெற்றி பெற வாய்ப்புண்டு. இதேபோல, ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் 9 இடங்களிலும், பாஜக 11 இடத்திலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
இங்கு காங்கிரஸ் 1 இடத்தில் வெற்றி பெற வாய்ப்புண்டு. பீகாரில் 40 தொகுதிகளில் பாஜக 33 இடத்திலும், காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி 7 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.