துணை முதலமைச்சர் பதவி விருப்பமா.? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

4
156

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இப்பதவியில் தனக்கு விருப்பம் இருக்கிறதா? என்பது பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை சென்னையில் நேற்று கொண்டாடினார். அப்போது அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பதில்களும் பின்வருமாறு;

கேள்வி: சினிமா நடிகர் எம்.எல்.ஏ. தற்போது அமைச்சராக இருக்கிறீகள். இந்த ஆண்டு உங்கள் பிறந்தநாளை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் முதல் பிறந்தநாள் கூடுதல் பொறுப்பு.

கேள்வி: பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக தி.மு.க. தொண்டர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறிர்கள்?

பதில்: டிசம்பர் 17ஆம் தேதி தி.மு.க. இளைஞர் அணிக்கு தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடுத்துள்ள மிகப்பெரிய பொறுப்பு. இந்த மாநாட்டை மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்தி காட்ட வேண்டும்.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தல் எப்படி இருக்கும்?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பதில்: தலைவரோட ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக எங்கள் தலைவருக்கும், இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.

கேள்வி: தி.மு.க. இளைஞரணி மாநாடு நாடாளுமன்ற தேர்தலுக்கு உறுதுணையாக இருக்குமா?

பதில்: எங்களுடைய கொள்கைகளை பேசி எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த வாய்ப்பை தலைவர் கொடுத்துள்ளார். எல்லா இயக்கங்களும் தேர்தலுக்கு முன்பு மாநாடு நடத்துவார்கள் தி.மு.க.வில் இளைஞர் அணிக்கு இந்த வாய்ப்பை தலைவர் வழங்கி இருக்கிறார். எனவே இந்த மாநாடு கண்டிப்பாக ஒரு முன்னோட்டமாக இருக்கும்.

கேள்வி: தமிழ்நாடு அரசு சார்பில் வி.பி. சிங் சிலை திறக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறதே.

பதில்: மத்திய அரசிடம் இதை தலைவர் வலியுறுத்தி வருகிறார்.

கேள்வி: உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று தி.மு.க. தொண்டர்கள் போஸ்டர் ஒட்டி உள்ளார்களே?

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

பதில்: எங்கே ஒட்டி உள்ளார்கள். நான் பார்க்கவே இல்லையே!

கேள்வி: துணை முதலமைச்சர் பதவியில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா?

பதில்: எனக்கு விருப்பமில்லை.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். இதற்கிடையே சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம் உங்களை துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அடுத்த பிறந்த நாளில் துணை முதலமைச்சராகி விடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதெல்லாம் முதலமைச்சர் தலைவரின் முடிவு. இது பற்றி நான் எப்படி சொல்ல முடியும்?, என்று கூறினார்.

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here