நமச்சிவாயம்

பாஜக வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி விடாப்பிடியாக இருந்ததால் பாஜக வேட்பாளராக நமச்சிவாயம் அறிவிக்கப்படுகிறார். இன்று, நாளைக்குள் அறிவிப்பு வெளியாகும் காங்கிரசுக்கு எதிராக நமச்சிவாயம் போட்டியிடுவதன் மூலம் புதுச்சேரி தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளது.

புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியும், ஆளுங்கட்சி யான தேஜ கூட்டணியில் பாஜகவும் களமிறங்குகின்றன.

பாஜக வேட்பாளர் தேர்வு

அதேபோல் அதிமுக தனித்து களமிறங்கும் முடிவில் உள்ளது. இதனால் மனுதாக்கல் முடிவடைய ஒருவாரமே உள்ள நிலையில் காங்கிரசில் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஆனால் பாஜகவில் வேட்பாளர் தேர்வு இழுபறியில் உள்ளது.

குறிப்பாக சிறுமி படுகொலைக்கு பின்பு, ஆளுங்கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் வைத்திலிங்கத்துக்கு போட்டியாக சரியான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதில் கூட்டணி கட்சி தலைவரான முதல்வர் ரங்கசாமி உறுதியாக இருந்தார்.

முதல்வர் ரங்கசாமி விடாப்பிடியாக இருந்ததால் பாஜக வேட்பாளராக அறிவிப்பு

இந்த தகவலை பாஜக மேலிட பொறுப்பாளர்களிடம் திட்டவட்டமாக அவர் கூறிவிட்ட நிலையில் புதுச்சேரி மக்களுக்கு நன்கு அறிமுகமான, கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் வேட்பாளரை நிறுத்த பாஜக முடிவெடுத்து கட்சி மேலிடத்துக்கு பட்டியல் அனுப்பியது.

அதில் முதலிடத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பெயர் இருந்தது. இதனால் அவர் தான் வேட்பாளர் என்பது 99 சதவீதம் உறுதியாகி விட்டதாக அந்த கட்சி வட்டாரங்களில் தகவல் பரவின.

நமச்சிவாயம்

இதனிடையே நமச்சிவாயம் விடாப்பிடியாக தான் தேசிய அரசியலை விரும்பவில்லை என வெளிப்படையாக கூறிவிட்ட போதும் ரங்கசாமியோ பாஜக தரப்பு முன்னிறுத்திய மற்ற வேட்பாளர்களுக்கு பச்சைக்கொடி காட்ட மறுத்து விட்டார்.

இதனால் ரங்கசாமி, நமச்சிவாயம் இடையே பாஜக வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் தற்போது திரைமறைவில் மோதல் நீடிப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

நமச்சிவாயம்

இதன் காரணமாக அடுத்தடுத்து 2 முறை முதல்வரை சந்தித்த நமச்சிவாயம், தன்னை எப்படியாவது வேட்பாளர் தேர்வில் இருந்து விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் சென்னையில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார்.

எந்த நேரத்திலும் டெல்லியில் இருந்து தனக்கு அழைப்பு வரலாம் என்பதால் அவசர பயணத்துக்காக அங்கேயே நமச்சிவாயம் முகாமிட்டு இருந்தார். அப்போது நேற்றிரவு புதுவைக்கு திரும்பினார்.

நமச்சிவாயம்

பாஜகவில் நமச்சிவாயம் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து சிட்டிங் எம்பி வைத்திலிங்கம் களமிறங்குவதால் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here