ஆரணி அருகே கடைக்கு சென்ற மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அடுத்த ஆரணி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி. இவர் 12 பொதுத்தேர்வு எழுதி விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கடைக்கு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை மேற்கொண்டு, மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஆரணி அருகே இரும்பேடு கிராமத்தில் மாணவி ஆதரவின்றி தவித்து கொண்டிருந்தார்.

இதை அடுத்து மாணவியை மீட்ட போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஆரணி அடுத்த இரும்பேடு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் விஜய் ரஞ்சித் (20), மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
மேலும் மாணவியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த விஜய் ரஞ்சித் இரும்பேடு கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டு சென்றுள்ளார். அதன்பேரில், விஜய்ரஞ்சித் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில், இரும்பேடு கிராமத்தில் தலைமறைவாக இருந்த விஜய் ரஞ்சித்தை ஆரணி தாலுகா போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.