டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் அவரது கட்சியை பதிவு செய்ததையடுத்து கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சற்றுமுன் டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்தார். “விஜய் மக்கள் இயக்கம்” என்பதை அரசியல் கட்சியாக பதிவு செய்து “தமிழக வெற்றி கழகம்” என அரசியல் கட்சி தொடங்கப்பட்டதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தமிழ்நாடு முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

கோவையிலும் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், இயக்க கொடியுடன் கேக் வெட்டியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதேபோல குறிச்சி பகுதியில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி, இளைஞரணி தலைவர் பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல் கோவையில் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தினர் வேலூரில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என அறிவித்ததை தொடர்ந்து வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் விஜய் மக்கள் இயக்க வேலூர் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு பெண்களுக்கு புடவைகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது கடலூரிழும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பேண்ட் வாத்தியங்கள் இசைத்து பேரணி மேற்கொண்டனர். பின்னர் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகம் என வெளியானதை அடுத்து கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பேரணியாக கடலூர் மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கிருந்த பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் இனிப்புகளையும் வழங்கினர்.
மேலும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ராஜ்குமார், ராஜசேகர், சீனு உள்ளிட்டோ தலைமையில் பேண்ட் வாத்தியங்கள் இசைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் விஜய் டெல்லி தேர்தல் ஆணையத்தில் கட்சி பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கோபிசெட்டிபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் நடைபெற்றது.

மதுரை மாநகர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் தங்கபாண்டியன் இளைஞரணி தலைவர் சதீஸ் தலைமையில் மதுரை மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பு பகுதியில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்தும், நடிகர் விஜயின் படத்திற்கு தீபாரதனை காண்பித்தும் வழிபாடு செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுடன் கேக் வெட்டியும் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.
அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைக்கான துணிகளை வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரசிகர்கள்;- அரசியலில் களமெடுத்துள்ளோம், மக்களுக்கான பிரச்சனையை முன்னிறுத்துவோம் என்றனர்.