கனடாவில் ஒன்டாரியோ மாகாணம் போமன்வில்லில் உள்ள ஒரு மதுபான கடையில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இதனை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், சரக்கு வாகனத்தில் தப்பி சென்ற சந்தேக நபரை துரத்தி சென்றனர்.
காவல்துறையினர் துரத்தலை கண்ட சந்தேக நபர் அனுமதி மறுக்கப்பட்ட சாலை வழியாக சரக்கு வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்றார். அப்போது எதிரே வந்த வாகனங்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில் ஒரு காரில் இருந்த இந்தியாவை சேர்ந்த மூத்த தம்பதி மற்றும் அவர்களின் பேரக்குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அப்போது குழந்தையின் பெற்றோர் காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் சரக்கு வாகனத்தை ஓட்டி சென்ற நபரும் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தது சென்னையை சேர்ந்த மணிவண்ணன் (60), அவரது மனைவி மகாலட்சுமி (50) மற்றும் அவர்களின் 3 மாத பேரக்குழந்தை ஆதித்ய விவான் என விசாரணையில் தெரியவந்தது.
மேலும் காயமடைந்தவர்கள் மணிவண்ணனின் மகன் கோகுல்நாத், மருமகள் அஷ்விதா என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தை ஏற்படுத்தி 3 பேர் பலியாக காரணமாக இருந்த நபர் இந்தியா வம்சாவளியை சேர்ந்த கொள்ளையன் ககன்தீப் சிங் (21) என்பதும் உறுதியானது. இந்த விபத்தில் பலியான ககன்தீப் சிங் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.