நான்குனேரியை தொடர்ந்து கழுகுமலையிலும் பட்டியலின பள்ளி மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் .

2 Min Read
பட்டியலின பள்ளி மாணவன் மீது தாக்குதல்

- Advertisement -
Ad imageAd image

நாங்குநேரி பட்டியலின பள்ளி மாணவன் விவகாரம் கடும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் தற்போது கழுகு மலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில்  11ஆம் வகுப்பு பயிலும் பட்டியலின மாணவர் ஹரி பிரசாத் மீது  வேற்றுச்சமுக  மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் .

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில்  11ஆம் வகுப்பு (அறிவியல்) பிரிவில் படித்து வரும் மாணவர்கள் ராஜகுருவுக்கும்,  ஹேமந்த் குமாருக்கும் இடையே சிறிய சிறிய பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.  இந்நிலையில் அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மோதலாக மாறி நேற்று (17-8-23) பிற்பகலில் இருவருக்கும் இடையே பள்ளி வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஹேமந்தின் நண்பரான  11 ஆம் வகுப்பு (காமர்ஸ் குரூப்பில் ) படித்து வரும் மாணவர் ஹரி பிரசாத் விலக்கி விட்டுள்ளார். அப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நீ எப்படி எங்கள் விஷயத்தில் தலையிடலாம் என மாணவர் ராஜகுரு பிரச்சனை செய்து உள்ளார். அதன்பிறகு பள்ளி வேலை நேரம் முடிந்து வழக்கம்போல அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மாணவர் ராஜகுரு தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்குகளில் மாணவர் ஹரி பிரசாத்தின் சொந்த ஊரான லட்சுமிபுரத்துக்கு இரவு 8 மணியளவில் சென்று  ஹரி பிரசாத்தின் வீடு எங்கே உள்ளது என விசாரித்து உள்ளனர்.  இதனிடையே மாணவர் ஹரி பிரசாத் லட்சுமிபுரத்தில் உள்ள கோயில்  திடலில் தனிமையில் இருப்பதை அறிந்த அந்த கும்பல் அங்கு சென்று மாணவர் ஹரி பிரசாத்தை சுற்றி வளைத்து சாதியைச் சொல்லித் திட்டி சரமாரியாக தாக்கி காயப்படுத்தி விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்று தலைமறைவாகினர்.

இந்த தகவலை  அறிந்த  மாணவர் ஹரி பிரசாத்தின் பெற்றோர் காயமடைந்த ஹரி பிரசாத்தை உடனடியாக அங்கிருந்து மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவர் ஹரி பிரசாத்க்கு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாங்குநேரியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவரும், அவரது தங்கையும்  சக மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவத்தை போல மற்றுமொரு அதே மாதிரியான ஒரு சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரங்கேறியிருப்பது கல்வித்துறை வட்டாரத்திலும் காவல்துறை வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக கழுகுமலை காவல் நிலைய போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்டமாக மாணவர்  ராஜகுரு, மற்றும் அவரது கூட்டாளிகளான தென்காசி மாவட்டம் சம்பா குளத்தை சேர்ந்த மனோஜ் குமார், புவனேஷ்  மற்றும் கழுகுமலையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சூர்யா, சரண் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a review