‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ திட்டத்தின் கீழ் பிரம்மா குமாரிகள் ஏற்பாடு செய்திருந்த ‘எனது வங்கம், போதையில்லா வங்கம்’ பிரச்சாரத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (ஆகஸ்ட் 17, 2023) கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், போதைப் பொருளைப் பயன்படுத்துதல் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தீங்கு விளைவிப்பதாகும். இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவதால், இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான திசையைத் தேர்வு செய்ய முடிவதில்லை.
இது மிகவும் கவலைக்குரியது. இதனை மாற்ற அனைத்து முனைகளிலும் செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆன்மீக விழிப்புணர்வு, மருந்து, சமூக ஒருமைப்பாடு, அரசியல் உறுதி ஆகியவற்றின் மூலம் இந்த நிலைமையை மாற்ற முடியும் என்று அவர் கூறினார். பிரம்மா குமாரிகள் போன்ற அமைப்புகள் இதுபோன்ற பிரச்சனைகளை விவாதித்து அவற்றுக்குத் தீர்வுகாண உழைப்பதை அவர் பாராட்டினார்.
மன அழுத்தம் மற்றும் மற்றவர்களின் வற்புறுத்தல் காரணமாக போதைப்பழக்கம் உருவாகிறது என்று அவர் கூறினார். அடிமையாதல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வேறு பல கோளாறுகளும் இதிலிருந்து உருவாகின்றன. போதைக்கு அடிமையானவர்களின் குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். போதைப் பழக்கத்திற்கு அடிமையான நண்பரின் குடும்பத்தினரின் கவனத்திற்கு அனைத்து இளைஞர்களும் இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருளை உட்கொண்டு மக்கள் தங்கள் வாழ்க்கையை அழித்துக்கொள்ள வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். ஏதேனும் மன அழுத்தத்தில் இருந்தால், அவர்கள் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது ஏதேனும் சமூக அமைப்புடன் பேச வேண்டும் என்று அவர் கூறினார்.
நமது மன உறுதியால் எதிர்கொள்ள முடியாத பிரச்சனை எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாவதை சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றார். போதைப் பொருள் வாங்குவதற்காக செலவிடப்படும் பணம் குற்றச் செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. போதைக்கு அடிமையானவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காகவும், சமூகம் மற்றும் நாட்டின் நலனுக்காகவும் இந்தக் கெட்ட பழக்கத்திலிருந்து வெளியே வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இளைஞர்களே நமது மிக முக்கியமான சொத்துக்கள். அவர்கள் தங்கள் எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த செலவிட வேண்டிய நேரமும் ஆற்றலும், போதை காரணமாக வீணடிக்கப்படுகிறது. மாணவர்கள் தவறான திசையில் செல்கிறார்களா என்பதைக் கல்வி நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். தவறு நடப்பது தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.