கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் மேலும் 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கள்ளசாராயம் என்ற பெயரில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை விற்பனை செய்ததை வாங்கி அருந்தியவர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் 155 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான தனிக்குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜா, ராமர், புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ், ஷாகுல் ஹமீது, பண்ருட்டியை சேர்ந்த சக்திவேல், கள்ளக்குறிச்சி அருகே உள்ள சூலாங்குறிச்சியை சேர்ந்த கண்ணன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யபட்டவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த தெய்வீகன், கள்ளக்குறிச்சி சூலாங்குறிச்சி அய்யாசாமி, செம்படாகுறிச்சி அரிமுத்து, சேஷசமுத்திரம் கதிரவன் ஆகியோர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கள்ளசாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக மெத்தனால் ஆலை உரிமையாளர்களான பென்சிலால், கவுதம் லால் ஜெயின், மெத்தனாலை விநியோகம் செய்த சடையன், ரவி, செந்தில், ஏழுமலை ஆகிய 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

அதை தொடர்ந்து கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்தது. இவர்கள் பெரிய நிறுவனங்களிடம் இருந்து மெத்தனாலை வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்ததாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 7 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து, கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை அடுத்து கைது செய்யபட்டவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவலில் உள்ள 7 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.