விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஜப்பான் நாட்டின் இந்தியாவுக்கான தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் விழுப்புரம் மாவட்டம் அரசியலிலும், அரசு உயர் பதவியிலும் பலர் தடம் பதிக்க வைத்த பெருமையை கொண்டுள்ள மாவட்டமாகத்தான் இருக்கிறது.
அரசு உயர் பதவியிலும், ஒன்றிய, மாநில அரசின் பல சாதனை திட்டங்களிலும் அங்கம் வகித்தவர்கள் பட்டியலில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

சமீபத்தில் உலக நாடுகளே வியந்து பார்க்கக் கூடிய திட்டமான சந்திராயன் – 2 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சாதாரண ரயில்வே ஊழியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு இன்னும் பாராட்டு விழாக்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மீண்டும் விழுப்புரம் அருகே ஒரு சாதாரண கிராமத்தை சேர்ந்த இளைஞர், ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் அருகே ராதாபுரம் என்ற சாதாரண கிராமத்தை சேர்ந்த அப்பர் – புனிதா தம்பதியின் மகன் சந்துரு (42) என்பவர் தான் ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

சந்துரு விழுப்புரம் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு, பின்னர் காரைக்குடியில் பிஎஸ்சி விவசாய பட்டப்படிப்பை முடித்த அவர், தொடர்ந்து டெல்லியில் எம்எஸ்சி அக்ரி, பிஹெச்டி படிப்பை முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து 2009 யூபிஎஸ்சி தேர்வு எழுதிய சந்துரு 2-வது முயற்சியிலேயே அவருக்கு ஐஎப் எஸ் பிரிவில் அயல்நாட்டு பணி வாய்ப்பு கிடைத்து சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்தது முதல் 2016 வரை ஸ்ரீலங்காவில் இந்தியாவிற்கான தூதராக அலுவலக முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா தூதரக அலுவலகத்திலும் பின்னர் 2020-ல் இந்தியா திரும்பிய அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வகிக்கும் செயலர் பதவி என இப்படி முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவரை ஜப்பான் நாட்டின் ஓசாகா பகுதி தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜப்பான் நாட்டில் இந்தியாவிற்கான மூன்று துணை தூதரகங்கள் உள்ளன. அதில் ஒன்றான ஓசாகா பகுதி தூதுவராக நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் அருகே சாதாரண கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்திய நாட்டின் சார்பில் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜப்பான் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளது.