நாடாளுமன்ற தேர்தலின் போது பாமகவின் உயர்மட்ட குழு கூடி மக்களவை தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தியது. பின்னர் பாமக நிர்வாகிகளுடன் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
நிருபர்களிடம் பேசிய பாமக மாநில பொதுச்செயலர் வடிவேல் ராவணன்;- பாஜகவுடன் கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் 2 முறை ராமதாசை சந்தித்துப் பேசினார். அவரும் சில உறுதிமொழிகளை அளித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதை மீறி பாஜகவுடன் கூட்டணி என்று பாமக அறிவித்து விட்டது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையின் போது பாமகவினரை வசைபாடினார். அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்காததே அதன் பெரும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, பாமக வேட்பாளர் அதிக எண்ணிக்கையிலான ஓட்டு பெற்றுவிடக்கூடாது என்றும்,

அதிமுகவினர் யாரும் பாமகவுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும், அவர்களுக்கு ஆதரவாக தொகுதியில் மறைமுகமாக செயல்படக்கூடாது என்றும், எடப்பாடி பழனிசாமி ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், பாமக அதிக ஓட்டுகளை பெற்றால் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான தொகுதியை கேட்க கூடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பாமக தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகள் எப்போதும் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்தை அவமானப்படுத்தியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளனர். இதனால், தேமுதிகவை பொறுத்தவரையில் அக்கட்சி எப்போதும் பாமகவுடன் இணக்கமாக செயல்படாத சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சுதீஷ் படுதோல்விக்கு பாமக தான் காரணம் என்று பிரேமலதா குற்றம் சாட்டினார். எப்போதும் இரு கட்சிகளின் தொண்டர்களுக்கும் ஏழாம் பொருத்தம் தான்.

மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் இலவச பேருந்து பயணத்திட்டம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் ஆகியவை வன்னிய பெண்கள் மத்தியில் மிகுந்த ஆதரவை பெற்றுள்ள திட்டமாக விளங்குகிறது.
இதுதவிர, திமுக கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிட்ட தொகுதியில் கூட அவர்கள் வெல்ல முடியாமல், திமுகவிடம் தோல்வி கண்டனர்.

எனவே ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு, அவர்கள் கட்சி சார்ந்த ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். மற்ற கட்சிகளின் வாக்குகள் கிடைப்பது கஷ்டம் என்றே அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.