வசந்த் ராஜ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பிளஸ் 1 மாணவியை கடத்தி 3 நாட்கள் சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்த வடசேரி பகுதியை சேர்ந்த வசந்த ராஜ் வயது (23), என்பவரை நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மேல கலுங்கடி பகுதியை சேர்ந்தவர் வசந்த ராஜ் வயது (23). இவர் மேளம் அடிக்கும் தொழிலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருடன் பழகிய வசந்தராஜ், கடந்த சில தினங்களுக்கு முன் அந்த மாணவியை தனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நண்பர் வீட்டில் யாரும் இல்லாமல் வீடு பூட்டி இருந்தது. நண்பரிடம் பேசி வீட்டை திறந்த வசந்தராஜ், மாணவியை மூன்று நாட்கள் அடைத்து வைத்து ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

காந்திப்புரம்

இந்த நிலையில் மாணவியை காணாமல் அவரது தந்தை பல்வேறு இடங்களில் தேடிய போது வசந்தராஜ் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வசந்தராஜை கைது செய்து மாணவியை மீட்டனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வசந்த ராஜிடம் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் மீது ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போக்சோ வழக்கு ஏற்கனவே ஒரு முறை பதிவாகி உள்ள நிலையில் தொடர்ந்து 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளை வசந்த ராஜ் ஏமாற்றி உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் பலர் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கருதி புகார்கள் அளிக்காததால் காவல்துறையின் பிடியிலிருந்து வசந்த ராஜ் தப்பித்து வந்தார்.

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம்

இந்த நிலையில் தற்போது புத்தேரி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை கடத்தி சென்று மூன்று நாட்கள் நண்பர் ஒருவரின் வீட்டில் அடைத்து வைத்து உள்ளார். சாப்பாடு சரிவர கொடுக்காமல் சித்ரவதை செய்து பலாத்காரம் செய்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் அளித்து வசந்தராஜ் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவிகளிடம் பழகி அவர்களை ஏமாற்றியதுடன் அவர்களின் பெற்றோரை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது .

ஆனால் இது தொடர்பாக இதுவரை புகார்கள் வரவில்லை. எனவே வசந்த ராஜ் மூலம் பாதிக்கப்பட்ட மாணவிகள், சிறுமிகளின் தரப்பில் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளிப்பவர்களின் விவரம் வெளியிடப்படாது என்றும் போலீசார் தரப்பில் தெரிவித்தனர். போலீஸ் பிடித்ததும் நாடகம் வசந்த ராஜ் மீது புகார் வந்து போலீசார் பிடித்தால் உடனடியாக நடுரோட்டில் படுத்து போலீசார் தன்னை தாக்குவதாக நாடகமாடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனால் இவரை விசாரணைக்காக அழைத்து வருவதற்கு போலீசார் அச்சப்பட்ட நிலை இருந்தது. தங்கள் மீது ஏதாவது புகார் அளித்து அது தொடர்பாக சிக்கலில் மாட்டி விட்டு விடுவாரோ என்ற பயத்தில் வசந்த ராஜ் மீது புகார் வந்தால் கூட போலீசார் விசாரணை நடத்த பயந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது புத்தேரி பகுதியைச் சேர்ந்த மாணவி அளித்த புகாரின் பேரில் தற்போது கைது செய்யப்பட்ட வசந்த ரஜை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது போலீசார் தன்னை தாக்கி விட்டதாக நாடகமாடி அங்கு இருந்த டாக்டர்களையும் ஏமாற்ற முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here