கோவை மாவட்டம், சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் எஸ்.என்.எஸ் கல்லூரி அருகே உள்ளது எ.டபிள்யூ.எச்.ஓ என்ற அடுக்குமாடி குடியிருப்பு. அதில் பிரகாஷ் மற்றும் பாலசந்தர் ஆகிய இரண்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களின் பிரகாஷ் என்பவரின் 6 வயது ஆண் குழந்தை ஜியானஸ் ரெட்டி மற்றும் பாலசந்தரின் 8 வயது பெண் குழந்தை வியோமா ஆகிய இரு குழந்தைகளும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு சேதமடைந்த மின் ஒயர்களில் இருந்து குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்து உள்ளது. அவர்கள் உயிருக்கு போராடியதை பார்த்த அங்கு இருந்தவர்கள் குழந்தைகளை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அவர்களை பரிசோதித்து மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கு இருந்த மின்சார ஒயர்கள் சேதம் ஏற்பட்டு உள்ளதாக அங்கு வேலை செய்யும் சிவா என்ற எலக்ட்ரீசியனக்கு தெரியவந்தது. இது குறித்து அடுக்குமாடி குடியிருப்பின் தலைவர் நாராயணன் என்பவரிடம் கூறி உள்ளார்.

அதை பற்றி அடுக்குமாடி குடியிருப்பின் தலைவர் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் இந்த விபத்து ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழந்ததாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.