திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அலுவலக ஊழியர்களுடன் இனைந்து மாவட்ட ஆட்சியர் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார் .
பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
தமிழர் திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஒவ்வொரு துறையை சேர்ந்த அலுவலக பெண் ஊழியர்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்தும் விதவிதமான வண்ண கோலமிட்டு அசத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம் , தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மேளதாளங்களுடன் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழாக்கோலமாக மாறியது. மேளத்தால இசைகளுக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பெண் அலுவலர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார்.
பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று உறியடித்து கலக்கினார். அதைத்தொடர்ந்து பெண் அலுவலர்கள் போடப்பட்ட வண்ணக் கோலங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, சிறந்த கோலங்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அலுவலக ஊழியர்களுடன் இயல்பாகவும் , எளிமையாகவும் மாவட்ட ஆட்சியார் பிரபு ஷங்கர் கொண்டாடிய பொங்கல் , மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .