கோவையில் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்த நபர் போலிசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பு.
கோவை மாவட்டம், பேரூர் சாலை நாகராஜபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் மைதிலி வயது 34. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்து வந்து சிமெண்ட் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் தெற்கு உக்கடம் ஜி.எம். நகர் பகுதியைச் சேர்ந்த சையது இப்ராஹீம் வயது 40 என்பவர் அறிமுகம் ஆகி உள்ளார். சையது இப்ராஹீம் என்பவர் பிளாஸ்டிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஹோட்டல் தொழில் ஒன்றை நடத்தலாம் என முடிவு செய்தனர். இதற்காக மைதிலி சையது இப்ராஹீம் இடம் 6 லட்சம் ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளார்.

ஆனால் அவர்கள் ஹோட்டல் தொழில் நடத்தும் முடிவை கைவிட்ட நிலையில் அப்போது சையது இப்ராஹிமிடம் மைதிலி, தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மைதிலி இடம் பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி கோவை பந்தயம் சாலை பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது அதை நம்பி மைதிலி அங்கு சென்றார். ஆனால் அவர் மைதிலியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தன் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டைக் கொண்டு தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

இந்த சம்பவம் குறித்து மைதிலி கோவை பந்தய சாலை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சையத் இப்ராஹிமை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.