‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பயன்களை கேட்டறிந்தார்.
‘நீங்கள் நலமா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில்’ பயன் பெற்ற சிவகங்கை மாவட்டம், நெற்குப்பையைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது தனலட்சுமி, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகை தனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்து, முதல்வருக்கு நன்றி கூறினார்.
அதை தொடர்ந்து, ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில்’ பயன் பெற்று வரும் திருவள்ளூர், சோரஞ்சேரி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வரும் சிறுவன் பவனேஷின் தந்தை பிரபுவிடம் தொலைபேசியில் முதல்வர் பேசினார்.

அப்போது அவர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக உள்ளது. பள்ளிக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதோடு தனது மகன் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் மகனுக்கு காலை உணவு தயாரிக்க வேண்டிய நிலை இல்லாததால் மனைவியும் தற்போது பணிக்கு செல்கிறார் என்று தெரிவித்தார்.

‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் பயன் பெற்ற செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி நஸ்ரினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது, மாணவி நஸ்ரின், தற்போது தான் ராஜேஸ்வரி கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் பிஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு தனது படிப்பிற்கு தேவையான செலவுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அதேபோன்று “தோழி” திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் சீர்காழியை சேர்ந்த ஸ்வாதி முரளியை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ‘தோழி’ விடுதிகளை பெண்கள் பயன்பெறும் வகையில் ஒரு நல்வாழ்வு மகத்துவ மையமாக மாற்ற முதல்வரிடம் ஸ்வாதி முரளி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று உடனடியாக ஆவன செய்வதாக முதல்வர் உறுதியளித்தார்.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்து காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகளால் பயன் பெற்ற திருத்தணியை சேர்ந்த ஜெ.கே.குமாரை முதல்வர் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது குமார், காணாமல் போன தனது மகள் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு சிறுவர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டு, பின்னர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று தெரிவித்தார்.