திருவண்ணாமலை மாவட்டம், அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியத்துக்குட்பட்ட கல்லாத்தூர் ஊராட்சி குறிஞ்சி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைவாழ் ஜாதியை சேர்ந்த காளி மற்றும் மல்லிகா தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஸ்ரீபதி வயது 23.
இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் வீடு உள்ளிட்டவைகள் குப்பநத்தம் அணை கட்டும் பொழுது அரசாங்கம் எடுத்துக் கொண்டதன் காரணமாக காளி தனது மாமியார் வீடான ஏலகிரி மலைக்கு குடி பெயர்ந்து செல்கிறார்.

ஏலகிரி மலையில் உள்ள சார்லஸ் மேல்நிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை பயின்ற ஸ்ரீபதி டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப் படைப்பை படித்து முதல் ஆண்டு தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் உரிமையியல் தேர்வை எழுத பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர் புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 108 வாகன ஓட்டுனரான வெங்கட்ராமனுக்கும் ஸ்ரீபதிக்கும் சட்ட படிப்பு முடிந்த கையோடு திருமணம் நடைபெற்று உள்ளது.

ஸ்ரீபதிக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டு மகப்பேறு காலத்திலும் விடாமுயற்சியாக தனது கணவன் வெங்கட்ராமன் உதவியோடு தொடர்ந்து உரிமையியல் தேர்வு எழுதுவதற்கான மேல் படிப்பை தொடர்ந்து படித்துள்ளார்.
அதன் குறிப்பாக பிரசவ காலம் என்பது பெண்களுக்கு மறு பிறவி என்று கூறுவார்கள் அப்போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் ஆனால் ஸ்ரீபதி இதையெல்லாம் பொருட்படுத்தாது தான் ஏழ்மையான மலைவாழ் குடும்பத்தில் பிறந்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து போட்டி தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளார்.

இதற்கு முழு ஒத்துழைப்பாக அவரது கணவர் வெங்கட்ராமன் தன் மனைவி படிக்க தேவையான அனைத்து விதமான போட்டி தேர்வு புத்தகங்களை வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தி உள்ளார்.
இந்நிலையில் தனது குழந்தை பிறக்கக் கூடிய தேதியும் உரிமையியல் தேர்விற்கான தேதியும் ஒரே நேரத்தில் வந்ததால் ஸ்ரீபதிக்கும் அவரது கணவருக்கும் குழப்பம் ஏற்பட்டது.
மனம் தளராமல் தொடர்ந்து படித்து வந்த ஸ்ரீபதி தேர்வு எழுதக்கூடிய இரண்டு தினங்களுக்கு முன்னர் பிரசவ வலி ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் தேர்வு எழுத வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாலும் மன உறுதியோடு மலைவாழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருந்த ஸ்ரீபதி பிரசவம் ஏற்பட்ட வலியையும் பொருட்படுத்தாது தேர்வு எழுதியுள்ளார்.
அப்போது பிரசவ கால மருத்துவர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்காத தானாக முன்வந்து தேர்வு எழுத செல்வதற்காக அவர்களிடத்தும் அனுமதி பெற்று பின்னர் உரிமையியல் தேர்வை எழுதியுள்ளார். தற்பொழுது அந்தத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீபதி அதில் தேர்ச்சி பெற்று உரிமையியல் நீதிபதியாக வெற்றி பெற்றுள்ளார்.

அவரின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும் குறிப்பாக பெண்கள் கல்வி கற்பது என்பது சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் மலைவாழ் ஜாதியில் பிறந்து ஏழ்மையான சூழ்நிலையில் வளர்ந்து பல நேரங்களில் படிப்பதற்கு கூட இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாமல் சாதாரண விளக்கு வழியில் படித்து தான் சாதிக்க வேண்டும் என்று வெறியோடு இருந்த ஸ்ரீபதிக்கு மலைவாழ் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் உரிமையியல் தெருவில் வெற்றி பெற்ற ஸ்ரீபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன் குறிப்பாக ஸ்ரீபதி ஆரம்பம் முதல் தமிழ் வழியில் பயின்று தமிழ் வழியில் சட்டம் படித்து தமிழ் வழியில் உரிமையியல் தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வழியில் படிக்கும் மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தி உள்ளது. அந்த இட ஒதுக்கீட்டின்படி தான் தற்பொழுது ஸ்ரீபதிக்கு இந்த நீதிபதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே தமிழ் மொழியில் பயின்று தமிழ் மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஸ்ரீபதி தமிழ்நாட்டிற்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.

சமூக ஆர்வலர் மகாலட்சுமி கூறுகையில்;- இட ஒதுக்கீடு அளித்த தமிழக முதல்வர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் வழியில் பயின்று பட்டப்படிப்பு படிக்கும் மக்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியதன் அடிப்படையில் தான் ஸ்ரீபதி போன்ற மலைவாழ் மக்கள் தற்போது தமிழகத்தில் யார் என்று நிரூபித்துள்ளார்கள்.
மேலும் இந்த இட ஒதுக்கீட்டு வழங்கிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஸ்ரீபதியின் நண்பர் கூறுகையில்;- தொடர்ந்து அயராது உழைத்ததின் அடிப்படையில் ஸ்ரீபதி தற்போது தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் தனது பிரசவ காலத்திலும் விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையோடு செயல்பட்டதால் தான் இது சாதிக்க முடிந்தது என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார்.