கள்ளக்குறிச்சி கள்ளசாராய மரணங்களுக்கு, தமிழக அரசு கடமையை சரிவர செய்யாததே காரணம்,” என, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்த சிலர் கடந்த 18, 19 ஆம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளசாராயம் குடித்துள்ளனர். அதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என மொத்தம் 225 பேர் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் செவ்வாய்க்கிழமை வரை 59 பேர் உயிரிழந்த நிலையில், புதன்கிழமை காலையில் கருணாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
அதேபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ராமநாதன் (62), ஏசுதாஸ் (35) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி 62 ஆக அதிகரித்தது.
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து இறந்தவர்களின் வீடுகளுக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேற்று நேரில் சென்று விசாரித்தார்.

முன்னதாக, கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:- கள்ளக்குறிச்சி பகுதியில் பல காலமாக கள்ளசாராயம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. அரசும், காவல்துறையும் தடுக்கவில்லை. இந்த சம்பவத்தின் குற்றவாளி, எந்த அரசியல் கட்சியில் தொடர்பில் இருந்தாலும் அவர் குற்றவாளி தான்.

இது குறித்த அறிக்கை பிரதமரிடம் அளிக்கப்பட்டு, உரிய நீதி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தமிழக அரசு விழிப்புணர்வு இல்லாமல், தன் கடமையை சரிவர செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய காவல்துறை டி.எஸ்.பி., ஷன்மித் கவுர், துணை இயக்குனர் தினேஷ் வியாஸ், உறுப்பினர்கள் வட்டேப்பள்ளி ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.