தமிழக முதல்வரை சவுக்கு சங்கர் ஒருமையில் அழைத்துள்ளார். அதை ஏற்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இந்த நிலையில் பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து,

சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த 12 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெலிக்ஸ் ஜெரால்டை,
10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சி காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர். அவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே தன் மகன் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தனது மகன் செயல்படவில்லை என்றும், சட்டப்படியான நடைமுறைகளை பின்பற்றாமல் தனது மகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்கு தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.

இதை அடுத்து இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில், குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த பின், நாளை விசாரிப்பதாக கூறி, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.
இதேபோல, கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட கோரி அவரது தாய் கமலா தாக்கல் செய்த மனுவையும் விசாரித்த நீதிபதிகள்,

இந்த மனு மீதான விசாரணையையும் நாளைக்கு தள்ளிவைத்திருக்கிறார்கள். அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வீர்கள்? என்னவெல்லாம் செய்ய மாட்டீர்கள் என்று உத்தரவாதம் அளித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டனர்.
மேலும் தமிழக முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளதாக கூறிய நீதிபதிகள், அதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்கள்.
மேலும் இதுசம்பந்தமாக அவரை இன்று மாலையே சந்தித்து உத்தரவாதம் பெற்று பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என, சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்படி அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.