மேட்டுப்பாளையத்தை சிறந்த பகுதியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி பாஜக வேட்பாளரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் செய்தார்.
நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தேர்தல் பரப்புரையை துவங்கிய அமைச்சர், மேட்டுப்பாளையம் பிரதான சாலை, ஓடந்துறை சந்திப்பு, ராமசாமி நகர், எஸ் எம் நகர், சாந்தி நகர், பங்களா மேடு ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அவரோடு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது;- பொதுமக்கள் மத்தியில் பாரதிய ஜனதா கட்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த 10 ஆண்டு காலம் பிரதமர் மோடி அவர்கள் மக்கள் வளர்ச்சிக்கான ஆட்சியாக ஊழலற்ற ஆட்சியாக நடத்தியுள்ளார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் மாநில அரசு தடையாக உள்ளது.

மேட்டுப்பாளையத்தை சிறந்த பகுதியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – எல்.முருகன்
குறிப்பாக ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மாநில அரசு அதை சரியாக அமல்படுத்தாமல் குடிநீர் வினியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் விவசாயிகள் அதிகமாக உள்ள போதும், அவர்களுக்காகவும் இந்த பகுதி மக்களுக்காகவும் திமுக அரசு எந்த நன்மையையும் செய்யவில்லை.

மேட்டுப்பாளையத்தை சிறந்த பகுதியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் – எல்.முருகன்
அனைத்து தரப்பினர் குறித்தும் அவதூறான தகவல்களை திமுக வேட்பாளர் ஆ.ராசா பரப்பி வருகிறார். மேட்டுப்பாளையம் நகரத்தை சிறந்த பகுதியாக உருவாக்க பொதுமக்கள் பாஜகவிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அப்போது தான் மேட்டுப்பாளையத்தின் வளர்ச்சி, இங்குள்ள மக்களின் வளர்ச்சி உறுதி செய்யப்படும்’ என தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.