புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி கொலை வழக்கு தொடர்பாக காலாப்பட்டு சிறையில் 2 பேரிடம் சிறப்பு குழு விசாரணை மேற்கொண்டது.
அப்போது இந்த வழக்கில் கைதான 2 பேரின் ரத்த மாதிரி, கைரேகை உள்ளிட்ட ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு அவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2 ஆம் தேதி மாயமானார்.

அப்போது போலீசார் வழக்கு பதிந்து தேடிய நிலையில் 5 ஆம் தேதி அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் கை, கால்கள் கட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அதேபகுதியில் வசிக்கும் விவேகானந்தன் வயது (56), கருணாஸ் வயது (19) என்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றம் அழைத்து வராமல் சிறப்பு அனுமதி பெற்று காலாப்பட்டு சிறையில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அடைத்தனர்.

பின்னர் சிறுமியின் உடல், அதிகாரிகள் முன்னிலையில் ஜிப்மரில் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு சீனியர் எஸ்பி கலைவாணன் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்கள், சாட்சி ஆவணங்கள் மட்டுமின்றி பிரேத பரிசோதனையின் போது மருத்துவ பரிசோதனையில் கைப்பற்றிய தடயங்கள், வழக்கில் கைதான 2 பேரின் வாக்குமூலம் சேகரித்தனர்.

அப்போது ஆவணங்கள் 2 அட்டை பெட்டிகளில் புதுச்சேரி போக்சோ வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத்தில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. சிறுமியின் முடி, எலும்பு உள்ளிட்டவை அடுத்த கட்ட மருத்துவ ஆய்வுக்கு அனுப்பும் வகையில் நீதிமன்றத்தில் முன் அனுமதி பெற காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை தொடர்பான முதல்கட்ட அறிக்கை ஜிப்மர் நிர்வாகம் தரப்பில் புதுச்சேரி கிழக்கு எஸ்பி லட்சுமியிடம் சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.

போக்சோ வழக்கு என்பதால் அதன் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, பெண் அதிகாரியின் கையில் இருந்து நேரடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
இதனிடையே புதுச்சேரி சிறுமி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 2 பேரிடம் இருந்து கைரேகை, ரத்த மாதிரி உள்ளிட்ட ஆவணங்களை சேகரிக்க சிறப்பு குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதற்காக அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரியான கலைவாணன் முறையிட்ட நிலையில், நேற்று அனுமதி வழங்கியது.
இதை அடுத்து காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்ற கலைவாணன் தலைமையிலான அதிகாரிகள், அங்கிருந்த விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரின் கைரேகை மற்றும் ரத்த மாதிரி ஆகியவற்றை மருத்துவக்குழு, கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சேகரித்தனர்.

அப்போது ஒரு மணி நேரம் நடைபெற்ற விசாரணையின் போது முத்தியால்பேட்டை காவல் நிலைய அதிகாரியான எஸ்ஐ சிவப்பிரகாசம் உடனிருந்தார். இந்த மாதிரிகள் அனைத்தும் உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.