பஞ்சாப் மாநிலம், நூர்மஹால் அருகே உள்ள கோர்சியன் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்விர்கவுர் (29). அமெரிக்காவில் வசித்து வரும் அவர், நியூ ஜெர்சியில் கார்டெரெட்டில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் ஒரு கார் டிரைவர்.
இவரது இல்லத்தில் இந்தியாவை சேர்ந்த ககன்தீப் கவுர் தங்கியிருந்தார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் நகோடரில் உள்ள ஐஇஎல்டிஎஸ் பயிற்சி மையத்தில் படித்தவர். மேற்படிப்புக்காக அமெரிக்கா வந்திருந்தார். பஞ்சாப் மாநிலத்தில் படித்த போது, இவருக்கும், அங்கு படித்த கவுரவ் கில் (19) என்பவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இதை அடுத்து ககன்தீப் கவுரை பழிவாங்க கவுரவ் கில் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு கவுரவ் கில், வாஷிங்டனில் உள்ள கென்ட் நகரில் வசித்து வந்தார். அங்கிருந்து ககன்தீப் கவுர் இருக்கும் இடம் பற்றி விசாரித்தார். அபோது அவர் நியூஜெர்சியின் கார்டெரெட்டில் இருப்பது தெரியவந்தது.
அங்கு சென்ற அவருக்கும், ககன்தீப் கவுருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த ஜஸ்வீர் கவுர், அங்கு வந்தார். அப்போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த கவுரவ் கில் சரமாரியாக சுட்டார். இதில் ஜஸ்வீர் கவுர் மீது 7 முறை குண்டு பாய்ந்தது.

மேலும் ககன்தீப் கவுர் மீதும் குண்டு பாய்ந்தது. ஆனால் ஜஸ்வீர் கவுர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். ககன்தீப் கவுர் குண்டுகாயத்துடன் நெவார்க் பல்கலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் அறிந்ததும் போலீசார் கவுரவ் கில்லை கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ககன்தீப் கவுரை கொல்வதற்காகவே கவுரவ் கில் அமெரிக்கா சென்று இருப்பதும், அவரை தேடி அமெரிக்காவில் 4500 கிமீ சுற்றித்திரிந்து இருப்பதும் தெரியவந்தது.

காதல் மோதலில் இந்த கொலை நடந்ததா என்பது தெரியவில்லை. இதை அடுத்து மிடில்செக்ஸ் கவுண்டி கோர்ட்டில் நீதிபதி கேரி பிரைஸ் தலைமையில் உள்ள அமர்வு முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இன்று மீண்டும் அவர் விசாரிக்கப்பட உள்ளார். அப்போது கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.