பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகாரில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் தேவே கௌடவின் பேரனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா வியாழக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

ஜெர்மனியிலிருந்து வியாழக்கிழமை கர்நாடகா திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கேம்பேகௌட சர்வதேச விமான நிலையத்தில் வைத்து வியாழக்கிழமை நள்ளிரவு 12.52 மணியளவில் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப், சிறப்பு புலனாய்வு குழு இணைந்து கைது செய்தது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

சாம்பல் நிற மேற்சட்ட அணிந்திருந்த பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான வாயிலில் நடந்து சென்ற போது கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் ஹசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், ஏப்ரல் 26 ஆம் தேதி அத்தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அன்றிரவே ஜெர்மன் புறப்பட்டுச் சென்றார்.

பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பான 2,960 வீடியோக்கள் உள்ளதாக கூறப்படும் பென்டிரைவ்கள், வாக்குப்பதிவுக்கு 5 நாட்கள் முன்னதாக, கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதியன்று பல்வேறு பொது இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.