கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு ரூ.821 கோடி அதிகரித்துள்ளதாக பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தனத்தில் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் துணைத்தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பதிவுத்துறை பணியின் போது மறைந்த 2 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அதை தொடர்ந்து, அமைச்சர் பேசும் போது;-
பதிவுத்துறையில் இந்த நிதியாண்டில் ஜூலை 17 ஆம் தேதி வரை ரூ.5,920 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே நாளின் வருவாயுடன் ஒப்பிடும் போது ரூ.821 கோடி அதிகமாகும்.

அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்த அலுவலர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, அங்கீகாரமற்ற மனைப்பிரிவை பதிவு செய்யும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு திடீர் ஆய்வு செய்து பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் ஆவணப்பதிவு செய்தல்,

ஆவணங்களை உரிய நேரத்தில் ஒப்படைத்தல், போலி மற்றும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பதிவுகளை தடுத்தல் போன்ற பணிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த கூட்டத்தில் வணிகவரி, பதிவுத்துறை செயலர் பிரஜேந்திர நவ்நீத், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.