விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று விஜயபிரபாகன் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, விருதுநகர் தொகுதியில் தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகனை களமிறக்கியது. வாக்கு எண்ணிக்கை நாளான முதற்கட்ட சுற்றுகளில் விஜயபிரபாகன் முன்னிலையில் இருந்தார்.

பின்னர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், முன்னிலை பெற்றார். வாக்கு எண்ணிக்கை சுற்றுகளில் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர். கடைசி சுற்று வரை இழுபறி நீடித்த நிலையில், 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், வாக்கு எண்ணிக்கையில் பல தவறுகள் நடந்ததால், விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் விஜயபிரபாகன் மனு அளித்துள்ளார். ஏற்கெனவே மின்னஞ்சல் வாயிலாக விஜயபிரபாகன் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,

தற்போது கூடுதல் ஆவணங்களுடன் நேரிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகன்;- “விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது அதிக குளறுபடிகள் நடந்துள்ளது. அதற்கான தகுந்த ஆதாரங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்.
வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். ஒரு வாரத்தில் முடிவு தெரிவிப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக விஜயபிரபாகன் தெரிவித்தார்.