ஒன்றிய அரசை கண்டித்து சிதம்பரம், விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் விளைபொருட்களுக்கு அடிப்படை ஆதரவு விலை நிர்ணயம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் விழுப்புரத்தில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் ஈசன் முருகேசன் தலைமையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 60 பேரை கைது செய்தனர். இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் முருகசாமி தலைமையில் விவசாயிகளை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் இருந்து மதுரை செல்லும் ரயில் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர். அதை தொடர்ந்து ரயில்வே இருப்புப்பாதை போலீசார் மறியலில் ஈடுபட்ட 40 விவசாயிகள் என மொத்தம் நேற்று தனித்தனியே ரயில் மறியலில் ஈடுபட்ட 100 விவசாயிகளை கைது செய்தனர்.

அப்போது கைது செய்யப்பட்ட அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். கடலூர் மாவட்டம், அடுத்த சிதம்பரத்தில் நேற்று மதியம் அகில இந்திய விவசாய சங்கங்களின் சார்பில், ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன், ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிதம்பரம் காந்தி சிலை அருகே விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டு, ரயில் நிலையம் சென்றனர்.

அப்போது, அங்கு சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி,ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றம் போலீசார் அவர்களை ரயில் நிலையம் வளாகம் முன் தடுத்து நிறுத்தினர்.

இதை அடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் 25 பேரை கைது செய்து, அதேபகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.