கோவையில் நாளை பிரதமரின் வாகனப்பேரணி நடைபெறுவதையொட்டி, சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக கோயம்புத்தூருக்கு நாளை (மார்ச் 18) வரும் பிரதமர் நரேந்திர மோடி, கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை 3.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப்பேரணி (ரோடு ஷோ) மேற்கொள்கிறார்.

அப்போது மாலை 4 மணிக்கு கவுண்டம்பாளையத்தில் தொடங்கும் பேரணி, ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே நிறைவடைகிறது. பிரதமரின் வாகனப்பேரணியை முன்னிட்டு, கோவையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏறத்தாழ 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவையில் முப்படை அலுவலகங்கள், காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட சில முக்கிய இடங்களில் ஏற்கெனவே ட்ரோன்கள் பறக்க தடை உள்ளது.

பிரதமர் வருகையையொட்டி, துடியலூர், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளிலும் ட்ரோன்கள் பறக்க காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
பிரதமரின் வாகனப்பேரணியை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்புக் குழுவினர் கடந்த இரு நாட்களாக ஏ.ஐ.ஜி.ராவூப் தலைமையில் கோவையில் முகாமிட்டுள்ளனர்.

அப்போது சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று பேரணி தொடங்கும் கவுண்டம்பாளையம், முடிவடையும் இடமான ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், பேரணி நடக்கும் வழித்தடங்கள் முழுவதையும் ஆய்வு செய்தனர். அவர்களுடன் மாநகரகாவல் துறை துணை ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் ரவி உள்ளிட்டோரும் சென்றனர்.

அதை தொடர்ந்து, சிறப்பு பாதுகாப்புப் பிரிவினர், காவல் துறை அதிகாரிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். மேலும், வாகன ஒத்திகை நிகழ்ச்சியும் காவல் துறையினரால் நேற்று நடத்தப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை கோயம்புத்தூரில் நடைபெறும் சாலை வாகனப்பேரணி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

இதற்காக, கோயம்புத்தூர் மாநகர பகுதியில் உள்ள கவுண்டம்பாளையம் சந்திப்பு முதல் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை சுமார் மூன்று கிலோமீட்டர் அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரை உற்சாகத்துடன் வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது சாலையின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கட்சிக்கொடிகள் நடப்பட்டு வருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகர காவல் துறையோடு இணைந்து மத்திய பாதுகாப்பு குழுவினரும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும் நாளை மாலை 5.30 மணி அளவில் கோவை விமான நிலையம் வரும் பிரதமர், 5.45 மணிக்கு கவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து வாகன பேரணியை துவங்குகிறார்.

அப்போது சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. பின்னர் இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர், செவ்வாய்க்கிழமை காலை கேரளா புறப்படுகிறார்.