3-வது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி நாளை வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார். இத்தாலியில் தொடங்கும் ஜி 7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி நாளை பங்கேற்கிறார்.
நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர்களும் பதவியேற்றதுடன் துறைகளில் பொறுப்பேற்றும் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் நாளை முதலாவது வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார் நரேந்திர மோடி. தற்போது உலக நாடுகளின் முக்கிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் ஜி 7-ன் தலைமை பொறுப்பை இத்தாலி வகிக்கிறது.
இந்த ஆண்டு ஜி 7 உச்சி மாநாட்டை நடத்தும் இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை இத்தாலி புறப்பட்டுச் செல்கிறார்.

இத்தாலியின் அபுலியாவில் நாளை முதல் வரும் 15 ஆம் தேதி ஜி 7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் உலக நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ள உக்ரைன், ரஷ்யா யுத்தம், இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த மாநாட்டினிடையே உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

பிரதமர் மோடியுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் தலைமையிலான குழுக்களும் ஜி 7 உச்சி மாநாட்டுக்கு செல்கிறது. பிரதமர் மோடியின் இத்தாலி பயணம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகும்.