முன்னாள் அமைச்சர் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலாளர் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் க.பொன்முடி. தமிழக அரசின் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருங்கிய வட்டாரத்தில் முக்கியமான நபர். விழுப்புரம் திமுகவின் பெரும்புள்ளி.

இவர் சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 6 ஆண்டுகளுக்கு எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட முடியாது. இதை அடுத்து நாடாளுமன்ற தேர்தலுடன் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இதை அடுத்து பொன்முடி அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை இழந்துள்ளார். மேலும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலிலும் போட்டியிட முடியாது. அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டு, அவர் கவனித்து வந்த உயர்கல்விதுறை இலாகா, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் இருந்தது. இந்த நிலையில், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக நேற்று தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதால் பொன்முடி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
அப்படி அறிவிக்கும்பட்சத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் திருக்கோவிலூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.