பல்லடம் அருகே மாதப்பூரில் நடைபெறும், பாஜக மாநிலத்தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயண நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறாா்.
மக்களவைத் தோ்தலை முன்னிட்டு 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வரும் நிலையில், பாஜக மாநிலத்தலைவா் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தை உள்துறை அமைச்சா் அமித்ஷா கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் முக்கிய இடங்களில் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொண்டு, மத்திய அரசின் சாதனைகளைப் பேசி வருவதுடன், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து வந்தாா்.
இந்த நிலையில் அண்ணாமலையில் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின்
நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த மாதப்பூரில் மதியம் நடைபெறுகிறது. இதில், பிரதமா் மோடி பங்கேற்று அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரையை நிறைவு செய்து வைக்கிறாா்.

முன்னதாக திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட நடைப்பயணம் திருப்பூா் புதிய பேருந்து நிலையத்தில் காலை 10 மணி அளவில் தொடங்குகிறது.
அப்போது திறந்த வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை திருப்பூா் ரயில் நிலையம் அருகே உள்ள குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறாா். அதன்பின், திருப்பூா் பழைய பேருந்து நிலையம், பல்லடம் வழியாக மாதப்பூரில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்குச் சென்றடைகிறாா்.

பிரதமர் மோடி இந்த நிகழ்விற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.20 மணி அளவில் புறப்படும் பிரதமா் மோடி, சூலூா் விமான படைத்தளத்துக்கு பிற்பகல் 2.05 மணி அளவில் வந்தடைகிறாா்.
அதன்பிறகு 2.10 மணி அளவில் ஹெலிகாப்டா் மூலமாகப் புறப்பட்டு 2.30 மணி அளவில் பொதுக்கூட்டத்திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் மைதானத்தை வந்தடைகிறாா். ஹெலிபேட்டில் இருந்து மாநாட்டுத்திடல் வரை ஒரு கிலோமீட்டா் தொலைவுக்கு தனியாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்யேக சாலையில் திறந்த வாகனத்தில் பயணம் செய்யும் பிரதமா் மாநாட்டு மேடையில் அண்ணாமலையின் நடைப்பயணத்தை நிறைவு செய்து வைத்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா். இந்த கூட்டத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளஉள்ளனர்.
பிரதமா் மோடி வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக திருப்பூா், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூா், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களிமேலும், உளவுத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

பொதுக்கூட்ட மைதானத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுக்கூட்டத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும், தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனா்.
அவசர நிலை கருதி, 10 தீயணைப்பு வாகனங்கள், 30 ஆம்புலன்ஸுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை லட்சக்கணக்கில் திரளும் பொதுமக்கள், தொண்டா்கள் பாா்வையிடும் வகையில் 50 பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அப்போது மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள், பாஜக தேசிய, மாநில நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்க உள்ளனா். இதன்பிறகு பிற்பகல் 3.35 மணி அளவில் ஹெலிகாப்டா் மூலம் பிரதமா் மோடி மதுரை சென்றடைகிறாா்.
சுமாா் 5 ஆயிரம் போலீசார் திருப்பூருக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்த மாநாட்டு நிகழ்வையொட்டி போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.