நாட்டில் 18 ஆவது மக்களவையைத் தேர்வு செய்ய 7 கட்டங்களாக (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) தேர்தல் நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே நான்கு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிரத்தில் 13, மேற்கு வங்கத்தில் 7, பிகார், ஒடிஸாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிக்கு 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ள அமேதி, ரேபரேலி உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மக்களவை தொகுதிகள் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 54.29 சதவீதம், மேற்கு வங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 74.65 சதவீதம், பிகாரில் 54.85 சதவீதம், ஜம்மு காஷ்மீரில் 56.73 சதவீதம், ஜார்க்கண்டில் 63.07 சதவீதம், ஒடிஸாவில் 67.59 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 57.79 சதவீதம், லடாக்கில் 69.62 சதவீதம் ஆகிய ஒட்டுமொத்தமாக வாக்குகள் பதிவாகின.

ஒட்டுமொத்தமாக 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத அச்சுறுத்துல் அதிகம் இருந்து வந்த ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் இதுவரை இல்லாத வகையில் 59 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 1984-ல் 58.84 சதவீத வாக்குகள் பதிவானதே இந்த தொகுதியின் அதிகபட்ச வாக்குப் பதிவாக இதுவரை இருந்து வந்தது. 5 ஆம் கட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் (லக்னௌ), பியூஷ் கோயல் (மும்பை வடக்கு), ஸ்மிருதி இரானி (அமேதி), காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி (ரேபரேலி),

லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் (ஹாஜிபூர்), தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா (பாரமுல்லா), ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாதின் மகள் ரோஹிணி ஆச்சார்யா (சரண்) உள்ளிட்டோர் களம் கண்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் அரம்பாக் தொகுதிக்கு உட்பட்ட கனாகுல் பகுதி மற்றும் பராக்போர், போங்கான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும், பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ஹூக்ளி தொகுதியில் தற்போதைய பாஜக எம்.பி.யும் வேட்பாளருமான லாக்கெட் சாட்டர்ஜி வாக்குச்சாவடி ஒன்றை பார்வையிடச் சென்ற போது, அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹௌரா தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் இரு கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. போங்கான் தொகுதிக்கு உட்பட்ட கெயிஷ்பூரில் உள்ளூர் பாஜக தலைவர் சுபிர் பிஸ்வாஸ், வாக்குச்சாவடிக்கு வெளியே திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ஹூக்ளியில் உள்ள சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை மிரட்ட பாஜகவினருக்கு மத்திய பாதுகாப்புப் படையினர் துணை போனதாக குற்றஞ்சாட்டி திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி முகவர்களை வாக்குச்சாவடிக்குள் செல்லவிடாமல் தடுத்தது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கோளாறு என 1,036 புகார்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலத்தில் ராஹி வட்டத்துக்கு உட்பட்ட பெலா கரா கிராமத்தில் 3 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் பாஜகவினர் தடுத்ததாக காங்கிரஸ் தரப்பில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து உத்தர பிரதேச பிரிவு காங்கிரஸ் சார்பில் அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்;- “ரேபரேலி தொகுதிக்கு உட்பட்ட ரசுல்பூரில் வாக்குச்சாவடி எண். 5 காலை 8 மணி முதல் மூடப்பட்டு, வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு செலுத்தாமல் திரும்பி சென்றனர்.

இப்படித்தான் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற பாஜக வியூகம் வகுத்துள்ளது’ என்று குற்றம் சாட்டினார். மகாராஷ்டிரத்தில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகளில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என சிவசேனை (உத்தவ் தாக்கரே) தலைவர் ஆதித்ய தாக்கரே தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டார்.
வரும் 25 ஆம் தேதி 6 ஆம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் 1 ஆம் தேதி 7 ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை ஜூன். 4-ஆம் தேதி நடைபெறுகிறது.